உளுந்தூர்பேட்டை அருகே பாிதாபம் சுடுகஞ்சி கொட்டி 1 வயது குழந்தை பலி
உளுந்தூர்பேட்டை அருகே சுடுகஞ்சி கொட்டி 1 வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
உளுந்தூர்பேட்டை
தொழிலாளி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 27). தொழிலாளி. இவருடைய மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு யோகஸ்ரீ (1) என்ற பெண் குழந்தை இருந்தது.
இந்த நிலையில் 2-வது முறையாக கர்ப்பமடைந்த ராஜகுமாரிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.
சுடுகஞ்சி கொட்டியது
ராஜகுமாரி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்ததால் யோகஸ்ரீ கிளாப்பாளையம் கிராமத்தில் உள்ள அவளது பாட்டி வீட்டில் இருந்தாள்.
சம்பவத்தன்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த யோகஸ்ரீ, சாதம் வடித்த சுடு கஞ்சி இருந்த பாத்திரத்தை பிடித்து இழுத்தாள். இதில் எதிர்பாராதவிதமாக அவள் மீது சுடு கஞ்சி கொட்டியதில் வலி தாங்க முடியாமல் கதறி துடித்தாள்.
பரிதாப சாவு
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று யோகஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவளை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி யோகஸ்ரீ பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுடுகஞ்சி கொட்டி 1 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் பாண்டூர் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story