பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம்
காரியாபட்டி யூனியனில் உள்ள பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்,
காரியாபட்டி யூனியனில் உள்ள பஞ்சாயத்து துப்புரவு பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
துப்புரவு பணியாளர்கள்
காரியாபட்டி யூனியனில் உள்ள கிராம பஞ்சாயத்துக்களில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் காரியாபட்டி யூனியனில் உள்ள கிராமப்பஞ்சாயத்துக்களில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தொகுப்பூதிய துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறோம். அரசு உத்தரவுப்படி காலமுறை ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. விருதுநகர் மாவட்டத்தில் மற்ற யூனியன்களில் 7ஆண்டுகள் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கியதுடன் கடந்த 2020-ம் ஆண்டு முதல் நிலுவைத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. எனவே காரியாபட்டியில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும் இது போன்று காலமுறை ஊதியமும், நிலுவை தொகையையும் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் விருதுநகர் மாவட்ட பொருளாளர் சுந்தரபாண்டியன் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
உயர வளர்ச்சி தடைப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுகிறோம். உயர் வளர்ச்சி தடைப்பட்டோரை கடும் ஊனமுற்றோராக அறிவித்து திட்டங்களில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
அரசு வீடு வழங்கும் திட்டத்தில் சேர்க்க வேண்டும். வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மாத உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தரவேண்டும். மாநிலம் முழுவதும் இலவச பஸ் பயண அட்டை வழங்க வேண்டும். உயர வளர்ச்சி தடைபட்டோர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி கேலிக்கு ஆளாகாமல் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story