தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 Oct 2021 10:08 PM GMT (Updated: 25 Oct 2021 10:08 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருவிளக்கு வேண்டும்

சேலம் அம்மாபேட்டை 37-வது வார்டு காமராஜ் தெருவில் தெருவிளக்கு இல்லை. இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் பொதுமக்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்கு அமைத்து கொடுக்க வேண்டும்.

-ஊர்மக்கள், காமராஜ் தெரு, சேலம்.

குடிநீர் தொட்டி கட்டும் பணி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா வி.செட்டி அள்ளி பஞ்சாயத்தில் குடிநீர் தொட்டி கட்ட எம்சேண்ட் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கு மணல் குவித்து வைத்து 10 மாதங்கள் ஆகிகிறது. இதுவரை குடிநீர் தொட்டி கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் பயன் இல்லை. குடிநீர் தொட்டி இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அங்கு குடிநீர் தொட்டியை விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஊர்மக்கள், வி.செட்டிஅள்ளி, தர்மபுரி.

சேலம் மாவட்டம் ஆண்டிபட்டி கிழக்கு வட்டத்தில் 4 நாட்களாக தண்ணீர் தொட்டி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் இல்லாமல் அந்த பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை உடனே சீரமைத்து அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணிகண்டன், ஆண்டிபட்டி, சேலம்.

குண்டும், குழியுமான சாலை

தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை அரிச்சந்திரன் கோவில் தெரு பகுதியில் சாலை பல ஆண்டுகளாகவே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மருத்துவ அவசரத்திற்கு கூட இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.

-ஊர்மக்கள், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.

கழிப்பறை கட்டண விவரம் இல்லை

ஓசூர் பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பறை பயன்படுத்த ஆண்களுக்கு ரூ.5-ம், பெண்களுக்கு ரூ.10-ம் வசூலிக்கின்றனர். இந்த கட்டணத்தில் பொதுமக்கள் கழிப்பறை பயன்படுத்த சிரமப்படுகின்றனர். இதுதொடர்பான அறிவிப்பு பலகை அங்கு இல்லை. எனவே கழிப்பறைகளுக்கு மாநகராட்சி நிர்ணயித்துள்ள கட்டண விவரங்களை அங்கு எழுதி வைத்து வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், ஓசூர்.

சுகாதார வளாகம் அமைக்கப்படுமா?

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக கட்டுமான பணிகள் தொடங்கியது. இதன் காரணமாக வட்டார வளர்ச்சி அலுவலக பஸ் நிறுத்தத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுகாதார வளாகம் அமைக்கப்படவில்லை. இதனால் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பெண்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தற்காலிக பஸ் நிலையத்தில் சுகாதார வளாக வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.

-ராம், தர்மபுரி.

மேல்நிலை நீர்தேக்க தொட்டி வேண்டும்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சி 1-வது வார்டில் உள்ள கிணற்று நீர் ஏற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி (டேங்க்) பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. எனவே மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அதனை சரி செய்யவேண்டும்.

-ஊர்மக்கள், பொத்தனூர், நாமக்கல்.

வேகத்தடைகள் சீரமைக்கப்படுமா?
கிருஷ்ணகிரி நகரில் கோ-ஆப்ரேட்டிவ் காலனி செல்லும் பாதையில் 4 சாலைகள் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த இடத்தில் வேகத்தை குறைப்பதற்காக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள் சேதமடைந்து உள்ளன. இதனால் அந்த வழியாக இரவில் செல்லும் பல இரு சக்கர வாகனங்களும் விபத்துகளில் சிக்குகிறார்கள். மேலும் வேகத்தடை இருப்பதற்கான அறிகுறிகளும் அந்த பகுதியில் இல்லை. எனவே அந்த பகுதியில் உள்ள வேகத்தடையை சீரமைக்க வேண்டும்.

-ராஜூ, கிருஷ்ணகிரி.

தார் சாலையில் தேங்கும் மழைநீர்

தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி இருப்பதால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த சாலையில் ராமாக்காள்ஏரி அருகே தார் சாலையில் தெப்பம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தொடர்ந்து மழை நீர் தேங்கினால் இந்தப் பகுதியில் உள்ள தார் சாலை விரைவாக சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே தார் சாலையில் மழைநீர் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

-கண்ணன், தர்மபுரி.

குண்டும், குழியுமான சாலை

காரிமங்கலம் அகரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பஸ் நிலையத்திற்கு செல்லும் வழியில் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் இதனை சரி செய்ய வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

- ஊர்பொதுமக்கள், காரிமங்கலம், தர்மபுரி.

சேலம் சாமிநாதபுரத்தில் இருந்து அங்கம்மாள் காலனிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையை பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். மழைகாலங்களில் இந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

- ஊர்பொதுமக்கள், சாமிநாதபுரம், சேலம்.

சேதமடைந்த மின்கம்பம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் சந்திரப்பிள்ளைவலசு பஞ்சாயத்து பள்ளத்தாதனூரில் இந்திராநகர்காலனி உள்ளது. இந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தின் மேல் பகுதியில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் தெரிகிறது. இதுதவிர இந்த மின்கம்பத்தில் மின்விளக்கு கடந்த 4 மாதங்களாக எரிவது இல்லை. எப்போது வேண்டுமானாலும் இந்த மின்கம்பம் சாய்ந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த மினம்கம்பத்தை மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.பழனிமுத்து, பள்ளத்தாதனூர் வாழப்பாடி.

Next Story