இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 2 பேர் விடுதலை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட  புதுக்கோட்டை மீனவர்கள் 2 பேர் விடுதலை  ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 27 Oct 2021 11:17 PM IST (Updated: 27 Oct 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டையை சேர்ந்த 2 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டைப்பட்டினம்:
மீனவர் பலி 
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18-ந் தேதி சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த சுகந்தன், சேவியர் மற்றும் ராஜ்கிரண் ஆகிய 3 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். அன்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் படகில் இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியது. இதில் படகில் இருந்த 3 பேரும் நடுக்கடலில் தத்தளித்தனர். சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மாயமான மீனவர் ராஜ்கிரண், 2 நாட்கள் தேடுதலுக்கு பின் கடந்த 20-ந்தேதி நெடுந்தீவு அருகே சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 
மீனவர்கள் 2 பேர் விடுதலை 
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சேவியர், சுகந்தன் ஆகிய 2 பேரையும் சட்டவிரோதமாக உரிய ஆவணங்கள் இன்றி இலங்கைக்குள் நுழைந்ததாக இலங்கை கடற்படையினர் வழக்குப்பதிவு செய்து கடற்படை முகாமில் தங்க வைத்திருந்தனர். இந்த வழக்கு நேற்று ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி கிஷந்தன், மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக தவறுதலாக இலங்கை எல்லைக்குள் வந்ததாகவும், படகு நடுக்கடலில் மூழ்கியதால் இவ்வழக்கிலிருந்து மீனவர்கள் 2 பேரையும் விடுவிப்பதாக உத்தரவிட்டார்.
இதனையடுத்து மீனவர்கள் இருவரும் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள மெர்ஹானா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலமோ அல்லது இலங்கை கடற்படையினர், இந்திய கடலோர காவல்படையிடமோ ஒப்படைக்கபட்டு தாயகம் வந்து சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story