மூதாட்டி கொலையில் திடீர் திருப்பம் மளிகை கடைக்கார பெண் உரிமையாளர் கைது பரபரப்பு வாக்குமூலம்


மூதாட்டி கொலையில் திடீர் திருப்பம் மளிகை கடைக்கார பெண் உரிமையாளர் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 6 Nov 2021 3:35 AM IST (Updated: 6 Nov 2021 3:35 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே மூதாட்டி கொலையில் திடீர் திருப்பமாக மளிகை கடைக்கார பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே மூதாட்டி கொலையில் திடீர் திருப்பமாக மளிகை கடைக்கார பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மூதாட்டி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சுருளிஅள்ளியை சேர்ந்தவர் மங்கம்மாள் (வயது 75). இவரது கணவர் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்து விட்டார். இவருடைய ஒரு மகனும் இறந்துவிட்டார். இவருக்கு 2 பேத்திகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மங்கம்மாள் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் மர்ம நபர்கள் தாக்கி இருந்தனர். இந்த கொலை தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
பெண் கைது
இந்த நிலையில் மூதாட்டி கொலை தொடர்பாக உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த மாது (45) என்ற பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
அப்போது மூதாட்டி கொலையில் திடீர் திருப்பமாக மாது மங்கம்மாளை கொலை செய்தது தெரியவந்தது.. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 
அதன் விவரம் வருமாறு:-
கடன் தகராறு
நான், மளிகை கடையில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய மங்கம்மாளிடம் எனது கணவருக்கு தெரியாமல் பணம் கடன் வாங்கினேன். அவர் கொடுத்த பணத்தை அடிக்கடி திரும்ப கேட்டு வந்தார். அப்போது பணத்தை கொடுக்காவிட்டால் உனது கணவரிடம் பணம் வாங்கியதை கூறி விடுவேன் என்றார். இதனால் கடன் வாங்கியது வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் என கருதினேன். 
இந்தநிலையில் கடந்த 30-ந் இரவு நான் மூதாட்டி வீட்டிற்கு சென்று அவரை கட்டையால் தாக்கி கொன்றேன். பின்னர் டி.வி. சத்தத்தை அதிகமாக வைத்து விட்டு அங்கிருந்து வந்து விட்டேன். 1-ந் தேதி அக்கம் பக்கத்தினர் மங்கம்மாள் வீட்டில் இருந்து டி.வி. சத்தம் அதிகமாக வந்ததால் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்த போது மங்கம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை பிடித்து விட்டனர். 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து மாதுவை போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Next Story