கோமுகி அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றம் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர் மழையால் நீர் வரத்து அதிகரித்ததையடுத்து கோமுகி அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை அடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கச்சிராயப்பாளையம்
கோமுகி அணை
தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள் நீர் நிரம்பி வருகிறது. ஆறு மற்றும், கால்வாய்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிகிறது.
கல்வராயன்மலை பகுதியில் பெய்த பலத்த மழையால் கோமுகி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காட்டாற்று வெள்ளம் மூலமாக கோமுகி அணைக்கு ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆற்றுப் பாசன வாய்க்கால் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.
போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நீர் நிலை அருகே உள்ள பொதுமக்களிடம் தங்கள் குழந்தைகளை நீர் நிலைகளுக்கு குளிக்க அனுமதிக்க கூடாது என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அந்த வகையில் கோமுகி அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு கச்சிராயப்பாளையம் போலீசார் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். அப்போது பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். விடுமுறையை கொண்டாடுவதற்காக ஆறு, குளம், ஏரி மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் குளிக்க சிறுவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் பெற்றோர்களும், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story