மாவட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை
மாவட்ட பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் தெருக்களில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது.
மணப்பாறை
திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதேபோல நேற்று முன்தினம் இரவு கனமழையாக பெய்ய ஆரம்பித்தது. அந்த மழை நேற்று காலை வரை தொடர்ந்து நீடித்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் சாலையில் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. பஸ் நிலையம் முன்பு மழைநீர் குளம் போல் தேங்கியது.
பஸ் நிலையம் அருகே உள்ள கடைவீதியில் மழைநீர் செல்ல வழி இல்லாததால் சுமார் 2 அடிக்கு மேல் மழைநீர் முழுவதுமாக தேங்கி இருந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதேபோல் கரிக்கான்குளம், அண்ணா நகர், மஸ்தான் தெரு ஆகிய பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன் பல இடங்களிலும் மழைநீர் வீடுகளை சூழ்ந்தது.
சூழ்ந்த மழைநீர்
இதேபோல நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதுகுறித்த தகவலின்பேரில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் சாலை மற்றும் திருச்சி சாலை ஆகிய இரண்டு ரெயில்வே மேம்பாலங்களிலும் மழைநீர் நிரம்பி உள்ளதால் போக்குவரத்து இல்லாமல் போனது.
மேலும் ஆஞ்சநேயர் பகுதி அருகே உள்ள குளத்தில் மழைநீர் முழுவதுமாக வெளியேறி குடியிருப்பு மற்றும் வயல்வெளிகளை சூழ்ந்தது. மொண்டிப்பட்டி, சித்தாநத்தம், கே.பெரியபட்டி ஆகிய ஊராட்சிப் பகுதிகளிலும் மழைநீர் அதிக அளவில் வயல்வெளிகளில் புகுந்தது. செட்டிச்சத்திரம் உடையான்குளத்தில் இருந்து வெளியேறும் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு பல்வேறு இடங்களிலும் வயல்வெளிகளை மழைநீர் முழுவதுமாக சூழ்ந்து கொண்டது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் முற்றிலுமாக நாசமானது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகினர்.
எம்.எல்.ஏ. உதவி
மழைநீரால் மக்கள் அவதிப்படும் தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் பழனியாண்டி எம்.எல்.ஏ. சித்தாநத்தம், கே.பெரியபட்டி மற்றும் மொண்டிப்பட்டி ஊராட்சிப் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு மழைநீரை வெளியேற்றும் பணியை முடுக்கி விட்டார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை முழுவதையும் அவரே செலுத்துவதாக தெரிவித்து முதல் தொகையாக ரூ.7 ஆயிரம் வழங்கினார். மேலும், மணப்பாறை தாசில்தார் சேக்கிழார் தலைமையிலான வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.
மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகளின் மண் சுவர்கள் இடிந்து விழுந்தன. கிணறுகளும் இடிந்து சேதமடைந்தன. மணப்பாறை பகுதியில் பெய்த மழையால் பல்வேறு இடங்களிலும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
துவரங்குறிச்சி
திருச்சி மாவட்டம் வளநாட்டை அடுத்த கோவில்பட்டி அருகே உள்ள இரட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 45). கூலித் தொழிலாளியான இவரது வீட்டின் முன்புற சுவர் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. வீட்டில் உள்ளவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மருங்காபுரி வருவாய்த்துறையினர் பாதிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்டனர்.
முசிறி-தா.பேட்டை
முசிறி பகுதியில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. முசிறி பார்வதிபுரம் 9-வது தெருவில் மழைநீர் வீடுகளுக்கு முன்பு சாலைகளில் தேங்கி நின்றது. இதேபோன்று முசிறி அருகே வடுகப்பட்டி பகுதியிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பனந்தோப்பு பகுதியில் குடியிருப்பு வீடுகள், சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்து மழைநீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்றது.
தா.பேட்டை அருகே தும்பலம், சூரம்பட்டி, சேருகுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் வரத்து வாரிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. எம்.புதுப்பட்டி ஊராட்சி அழகாபட்டி புதுக்குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறியது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story