கொடுமுடியாறு அணை திறப்பு


கொடுமுடியாறு அணை திறப்பு
x
தினத்தந்தி 8 Nov 2021 7:03 PM GMT (Updated: 8 Nov 2021 7:03 PM GMT)

பிசான சாகுபடிக்காக கொடுமுடியாறு அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு நேற்று தண்ணீர் திறந்து வைத்தார்.

ஏர்வாடி:
பிசான சாகுபடிக்காக கொடுமுடியாறு அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு நேற்று தண்ணீர் திறந்து வைத்தார்.

அணையில் தண்ணீர் திறப்பு 

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது கொடுமுடியாறு அணை. இந்த அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சட்டசபை சபாநாயகர் மு.அப்பாவு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் கொடுமுடியாறு அணையில் இருந்து நேற்று தண்ணீரை திறந்து வைத்தார். 
பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

5,280 ஏக்கர் நிலம் 

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே கொடுமுடியாறு மற்றும் கோம்பை ஆறு இரண்டும் சேர்ந்து தாமரையாறு என்ற இடத்தில் இணையும் இடத்தில் கொடுமுடியாறு அணை கட்டப்பட்டுள்ளது. இங்கு பிசான பருவ சாகுபடிக்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொடிமுடியாறு அணையில் இருந்து தினமும் வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி வரை தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

இதன்மூலம் வள்ளியூரான், படலையார் மற்றும் ஆத்துகால்வாய் என 3 கால்வாய்கள் மூலம் 240 ஏக்கர் நிலமும், அதன்மூலம் 44 குளங்கள், 2,517 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும். வடமலையான் கால்வாய் மூலம் 3,232 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மொத்தமாக 5,280 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். நாங்குநேரி வட்டத்தில் 6 கிராமங்களும், ராதாபுரத்தில் 10 கிராமங்களும் என மொத்தம் 16 கிராமங்கள் பயன்பெறும்.

கடன் வழங்க வேண்டும்

நெல்லை மாவட்டத்தில் உள்ள 76 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் உறுப்பினராக இருக்கும் அனைவருக்கும் கடன் வழங்க வேண்டும். நெல் பயிர் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், வாழைக்கு ரூ.60 ஆயிரமும் வழங்க வேண்டும். இது ஒரு வருடம் வட்டி இல்லாமல் வழங்கப்படும். விவசாயிகளுக்கு ஒரு நபருக்கு அதிகப்பட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் வழங்க வேண்டும்.

உறுப்பினர்கள் மட்டும் அல்லாமல் புதிய உறுப்பினர்களாகவும் சேர்ந்து தங்களுக்கு விவசாயத்திற்கு கடன் வாங்கி கொள்ளலாம். புதிய உறுப்பினர்களாக வரும் நபர்களுக்கு வேளாண்மை கடன் சங்கத்தில் சேரும்போது என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை ஒரு பெரிய லேமினேஷன் ஆக பார்வைக்கு படும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல கூட்டுறவு சங்கங்களை கடனுக்காக விவசாயிகள் அணுக வரும்போது அவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும். 

இடையூறு

கடன் பெறுவதில் இடையூறாக இருந்தாலோ அல்லது தர மறுத்தாலோ உடனடியாக என்னிடமோ அல்லது மாவட்ட கலெக்டரிடமோ தெரியப்படுத்த வேண்டும். ரூ.1 கோடி, ரூ.2 கோடி என வரையறை இல்லாமல் சங்கங்கள் கடன் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். 
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் சுமதி, நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் மணிகண்டராஜன், உதவி பொறியாளர் மூர்த்தி, ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வகருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story