தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்


தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்
x
தினத்தந்தி 10 Nov 2021 6:37 PM GMT (Updated: 10 Nov 2021 6:37 PM GMT)

தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்

தொண்டி
திருவாடானை அருகேயுள்ள சூச்சனி மகாலிங்கபுரம் கிராமத்தில் மணிகண்டி, ஆதியூர் கண்மாய்களுக்கு வழியில் மணிமுத்தாறு கால்வாய் செல்கிறது. இக் கால்வாயை கடந்து தான் பல கிராமங்களுக்கு செல்ல வேண்டும். இதனால் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. மழை அதிகமாக பெய்யும் காலங்களில் மணிமுத்தாறில் தண்ணீர் அதிகமாக வரும் நேரங்களில் எல்லாம் இந்த தரைபாலத்திலும் தண்ணீர் செல்லும். அதேபோல் இந்த ஆண்டு கனமழை காரணமாக தற்போது இந்த தரைப்பாலத்தில் தண்ணீர் அதிக அளவில் சென்று கொண்டிருக்கிறது. இதனால் இந்த பாலத்தை கடந்து செல்ல வேண்டிய கிராம மக்களுக்காக கயிறு கட்டப்பட்டுள்ளது. மேலும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் பாதுகாப்பாக தரைப்பாலத்தை கடந்து செல்ல கல்லூர் ஊராட்சி துணைத்தலைவர் சசிகலா மூர்த்தி ஏற்பாட்டின் பேரில் சுமார் 30 இளைஞர்கள் தன்னார்வத்தோடு உதவி செய்து வருகின்றனர். இதனால் வாகனங்கள் ஏதும் செல்லமுடியவில்லை. மேலும் சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல மைல் தூரம் சென்று சுற்றுப் பாதையில் தங்கள் கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் திருவாடானை தாசில்தார் செந்தில்வேல் முருகன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தரைப்பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் மழை காலங்களில் இந்த தரைப்பாலத்தில் தண்ணீர் செல்லும் போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story