வாலிபர் வெட்டிக்கொலை


வாலிபர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 14 Nov 2021 10:43 PM IST (Updated: 14 Nov 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர்:
திருவாரூர் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 
வெட்டிக்கொலை 
திருவாரூர் அருகே உள்ள அகரதிருநல்லூர் காமராஜ் தெருவை சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் குமரேசன் (வயது 35). இவருக்கு சுதா என்ற மனைவியும், இரணியன் என்ற குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று மாலை குமரேசன் மோட்டார் சைக்கிளில் தனது உறவினர் சுசீலா என்பவருடன் காணூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு அரிசி மூட்டையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் சென்ற போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென குமரேசன் மோட்டார் சைக்களை வழி மறித்தனர்.
அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக குமரேசனை தலையில் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலே குமரேசன் துடி, துடித்து உயிரிழந்தார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஒடி வருவதற்குள் 4 பேரும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். 
தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் போலீ்ஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். 
அரசு பஸ் கண்ணாடி உடைப்பு 
தகவல் அறிந்ததும் குமரேசன் உறவினர், நண்பர்கள் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அப்போது ஆத்திரமடைந்த சிலர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மேலும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு  பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட குமரேசன் மீது சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.  மேலும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. 
பொதுமக்கள் பீதி
கொலையை நேரில் பார்த்த அவரது உறவினர் சுசீலாவிடம் போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தமிழார்வன் கடந்த சில நாட்கள் முன்பு வெட்டக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் அதே போல் பட்ட பகலில் வாலிபர் ெவட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் இடையே பீதி ஏற்பட்டுள்ளது.

Next Story