மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ‘போட்’ ஓட்டல்


படம்
x
படம்
தினத்தந்தி 18 Nov 2021 5:52 PM GMT (Updated: 18 Nov 2021 5:52 PM GMT)

சென்டிரல் ரெயில் நிலையத்தில் ‘போட்’ ஓட்டல் எனப்படும் கூண்டு போன்ற நவீன தங்கும் அறைகள் பயணிகள், பொதுமக்கள் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளது.

மும்பை, 

சென்டிரல் ரெயில் நிலையத்தில் ‘போட்’ ஓட்டல் எனப்படும் கூண்டு போன்ற நவீன தங்கும் அறைகள் பயணிகள், பொதுமக்கள் வசதிக்காக திறக்கப்பட்டுள்ளது. 

‘போட்’ ஓட்டல்

ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகேப் தன்வே மும்பை சர்ச்கேட்டில் நடந்த விழாவில் பல்வேறு ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் அவர் மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ‘போட்’ ஓட்டல் எனப்படும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட தங்கும் அறைகளை திறந்து வைத்தார். இது கேப்சூல் ஓட்டல் எனவும் அழைக்கப்படுகிறது.

சிறிய கூண்டு போன்ற இதன் அறைகளில் படுத்து தூங்கும் அளவுக்கும், உட்கார்ந்து இருக்கும் அளவுக்கும் இடம் இருக்கும். இந்த அறையில் டி.வி., ஏ.சி., படுக்கை, சிறிய லாக்கர் மற்றும் வை-பை உள்ளிட்ட வசதிகள் உலகத்தரத்தில் இடம்பெற்று இருக்கும். 

ரெயில் பயணிகள் 12 மணி நேரம் தங்குவதற்கு இந்த அறையில் ரூ.999 கட்டணமாகும். 24 மணி நேரத்திற்கு ரூ.1,999 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த அறைகளில் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் தங்கலாம். நாட்டிலேயே முதல் முறையாக மும்பை சென்டிரலில் இந்த போட் ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது.

ரூ.230 கோடி திட்டங்கள்

இதுதவிர மந்திரி ராவ்சாகேப் தன்வே அம்பர்நாத், கோபர் ரெயில் நிலையத்தில் புதிய பிளாட்பாரம் மற்றும் பல்வேறு ரெயில் நிலையங்களில் நடைமேம்பாலம், நகரும் படிக்கட்டு, லிப்ட், கிரான்ட் ரோடு ரெயில்நிலைய பாலம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார். 

மொத்தம் ரூ.230 கோடி மதிப்பிலான திட்டங்கள், வசதிகளை ராவ்சாகேப் தன்வே திறந்து வைத்ததாக மேற்கு ரெயில்வே பொது மேலாளர் அலோக் கன்சால் கூறினார்.

Next Story