கிராம மக்கள் சாலை மறியல்


கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 Nov 2021 7:56 PM GMT (Updated: 20 Nov 2021 7:56 PM GMT)

புதுப்பேட்டையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மங்களமேடு:

சாலை மறியல்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அத்தியூர் ஊராட்சி புதுப்பேட்டை கிராம மக்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்(100 நாள் வேலை) கீழ் நான்கு நாட்கள் வேலை பார்த்ததாகவும், ஆனால் தங்களது வங்கிக் கணக்கில் 2 நாள் வேலைக்கான ஊதியம் மட்டுமே வந்துள்ளது என்றும், மீதி 2 நாள் ஊதியம் வரவில்லை என்றும் கூறினர். மேலும் இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் தங்களை அவமரியாதையாக நடத்தியதாக கூறி புதுப்பேட்டை கிராம மக்கள் நேற்று காலை சுமார் 9 மணி அளவில் அகரம் சீகூர் - பெரம்பலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
விசாரணை நடத்த வேண்டும்
அப்போது தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாகவும், இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மங்களமேடு போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தனர். மறியலால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story