தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 Nov 2021 7:53 PM GMT (Updated: 23 Nov 2021 7:53 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

சுரங்கப்பாதையில் தேங்கும் கழிவுநீர்
தர்மபுரி மாவட்டம் அப்பாவு நகரில் இருந்து எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா நகருக்கு செல்லும் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சென்று வருகின்றனர். இந்த சுரங்க பாதையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. மழைக்காலம் மட்டும் இல்லாமல் மற்ற நேரங்களிலும் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதனை யாரும் கண்டுகொள்வது கிடையாது. எனவே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்தி, எம்.ஜி.ஆர்.நகர், தர்மபுரி.
சாலையை ஆக்கிரமித்த வாகனங்கள்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மெயின் ரோடு முழுக்க வாகனங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. சாலையில் செல்ல முடியாத அளவுக்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சில சமயங்களில் விபத்துகளும் நிகழ்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வாகனங்கள் சாலையை ஆக்கிரமிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்கவேல், குமாரபாளையம், நாமக்கல்.
எரிமேடை மயானம்
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா, எம்.காளிப்பட்டி கிராமத்தில் மேட்டூர் உபரிநீர் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு சென்று நிரம்புகிறது. இந்த ஏரி காலங்காலமாக மயானமாக பயன்படுத்தப்பட்டு‌ வந்தது. இதனால் சுமார் 3 கிலோ மீட்டர் சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்ய வேண்டிய உள்ளது. நீர் தேங்கிய பகுதியை தவிர்த்து எஞ்சிய பகுதியில் எரிமேடை மயானத்திற்கு வழிவகை செய்தால் கிராம மக்களுக்கு உதவியாக இருக்கும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், எம்.காளிப்பட்டி, சேலம்.
நோய் பரவும் அபாயம்
கிருஷ்ணகிரியில் சுங்கச்சாவடியை அடுத்து கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. கலெக்டர் அலுவலகத்தின் எதிரில் கிருஷ்ணகிரி -ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைந்துள்ளது. இங்கு சாலையோரத்தில் மூட்டை, மூட்டையாக தினமும் கோழிக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. மழைக்காலங்களில் அந்த பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் நாய்கள் அந்த கோழிக்கழிவுகளை இழுத்து வந்து சாலைகளில் போட்டு செல்வதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே  அதிகாரிகள் அந்த பகுதியில் கோழிக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், கிருஷ்ணகிரி.
சாலையில் ஓடும் மழைநீர் 
சேலம் மாவட்டம் கருப்பூர் வெங்காயனூர் பகுதியில் ஏரி நிரம்பி சாலையில் மழைநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அதிக மழை பெய்தால் ஊரூக்குள்ளும் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் அப்பகுதியில் கொசுத்தொல்லையும், நோய் பரவும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி இதனை சரி செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
-ஊர்மக்கள், வெங்காயனூர், சேலம்.
பொதுநூலகத்திற்கு இடவசதி
சேலம் மாவட்டத்தில் பொது நூலகத்துறையின் கீழ் ஊர்ப்புற நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல நூலகங்களில் இட நெருக்கடி உள்ளது. எனவே அந்தந்த ஊரின் மைய பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் இடங்களை ஒதுக்கி நூலக கட்டிடம் கட்டித்தர வேண்டும். இல்லையென்றால் பயன்பாடு இல்லாத கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டி அதனை நூலகத்துக்கு பயன்படுத்த வேண்டும்.
- குமரன், ஓமலூர், சேலம்.
சாக்கடை கால்வாய் வசதி
கிருஷ்ணகிரி மாவட்டம், புதுப்பேட்டை நெசவுக்கார தெருவில் தெருவிளக்குகள் 4 மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியே இருளில் மூழ்கி கிடக்கிறது. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் இல்லாததால்  மழைநீர் சாக்கடை நீரோடு கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றன. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறினால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே அந்த பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.
-ஜீனத்கனி, நெசவுக்கார தெரு, கிருஷ்ணகிரி.

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா காட்டூர் பகுதியில் நீண்ட காலமாக சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். மேலும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் சாலையில் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மு.விஜய், காட்டூர், சேலம்.
குவிந்து கிடக்கும் குப்பைகள் 
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரி பகுதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன. இது பல மாதங்களாக இப்படியே தான் இருக்கிறது. மழைக்காலம் என்பதால் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. கொசுக்களும் உற்பத்தியாகி தொல்லையாக இருக்கிறது. இதுபற்றி பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் கவனம் செலுத்தி இதனை சரிசெய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், பென்னாகரம், தர்மபுரி.
தெருவிளக்கு வேண்டும்
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா, மேச்சேரி ஒன்றியம் பொட்டனேரியில் இருந்து ஆரியன் காட்டு வளவு செல்லும் சாலையில் மாரியம்மன் கோவில் பகுதியில் தெருவிளக்குகள் இல்லை. இந்த சாலையில் செங்கல் சூளை, ஆட்டுபண்ணை போன்றவை உள்ளது. இரவு நேரங்களில் இங்கு மதுப்பிரியர்கள் அமர்ந்து மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த பகுதியில் தெருவிளக்கு அமைத்து தரவேண்டும்.
-ஊர்பொதுமக்கள், பொட்டனேரி, சேலம்.
மண்சாலையால் மக்கள் அவதி
சேலம் மாவட்டம் இடங்கண சாலை பேரூராட்சி மேல்மாட்டையம்பட்டி 1-வது வார்டில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள பெருமாள் கோவிலுக்கு செல்ல மண் ரோடு உள்ளது. பல ஆண்டுகாலமாக பக்தர்கள் இந்த மண் ரோட்டின் வழியாகத்தான் கோவிலுக்கு சென்று வருகின்றனர்.  மழைக்காலங்களில் மண் ரோட்டின் வழியாக செல்ல மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மண் ரோட்டை தார் சாலையாக அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், மேல்மாட்டையம்பட்டி, சேலம்.

Next Story