பெங்களூரு எலகங்கா ராஜகால்வாயை அகலப்படுத்த நடவடிக்கை - பசவராஜ் பொம்மை அறிவிப்பு


பெங்களூரு எலகங்கா ராஜகால்வாயை அகலப்படுத்த நடவடிக்கை - பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Nov 2021 9:06 PM GMT (Updated: 23 Nov 2021 9:06 PM GMT)

வெள்ளம் புகுந்த 400 வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், வெள்ள பாதிப்புகளை தடுக்க பெங்களூரு எலகங்கா ராஜகால்வாயை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

 பெங்களூருவில் நேற்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட பிறகு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ராஜகால்வாய் அகலம்

  கடந்த 3 நாட்களாக எலகங்கா பகுதியில் கனமழை பெய்ததால் அங்குள்ள ஏரி நிரம்பியது. அதன் கரை உடைந்து, குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேந்திரிய விகார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் 603 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் படகுகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.

  எலகங்கா ஏரிக்கு மேல் பகுதியில் 11 ஏரிகள் உள்ளன. அந்த ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. அதனால் அந்த ஏரிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துவிட்டது. பெங்களூரை சுற்றிலும் உள்ள ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. அங்கிருந்து ஜக்கூர் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக அந்த ஏரிகள் நிரம்பவில்லை. அதன் ராஜகால்வாய் அகலம் குறைவாக உள்ளதால், நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. சில இடங்களில் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

வெள்ளத்தை வெளியேற்ற...

  அந்த ராஜகால்வாயை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தற்போது அந்தகால்வாயின் தற்போதைய அகலம் 8 அடியாக உள்ளது. வரும் காலத்தில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் நோக்கத்தில் இதை 30 அடியாக அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தேங்கியுள்ள வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். பெங்களூருவில் 50 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் அமைக்க முடிவு செய்துள்ளோம். மேலும் 50 கிலோ மீட்டர் கால்வாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

  எலகங்கா பகுதியில் 400 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 10 கிலோ மீட்டர் முக்கிய சாலை சேதம் அடைந்துள்ளது. சிறிய சாலைகள் 20 கிலோ மீட்டர் நீளத்திற்கு சேதம் அடைந்துள்ளன. மழைநீர் புகுந்த வீடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.

தமிழ்நாட்டிற்கு செல்கிறது

  ஜவஹர்லால் நேரு ஆராய்ச்சி மையத்திற்குள் நீர் புகுந்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முழு விவரங்களை கேட்டு பெற்றேன். இந்த அளவுக்கு கனமழை முன் எப்போதும் பெய்தது இல்லை. அதனால் ஜக்கூர் ஏரி நிரம்பி இந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த மையத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளது. நான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இங்கு வந்தேன். அப்போது சில கால்வாய்கள் குறித்து கோரிக்கை விடுத்தனர். அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜகால்வாய்களை தாண்டி இந்த நீர் வந்துள்ளது. இது வெள்ளம்.

  ஜக்கூர் ஏரி நிரம்பி இங்கிருந்து பினாகினி அணைக்கு சென்று அங்கிருந்து பெண்ணாறு வழியாக தமிழ்நாட்டிற்கு செல்கிறது. வரும் நாட்களில் இந்த மையத்திற்குள் மழைநீர் வராமல் தடுக்கும் நோக்கத்தில் புதிதாக ஒரு கால்வாய் அமைக்கப்படும். இதற்காக ஒரு திட்டம் வகுக்கப்படும். இந்த நிறுவனத்தில் ஆய்வு கூடத்தில் வெள்ளம் புகுந்து, பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் மாதிரிகளும் மழைநீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராஜகால்வாய்கள் மீது கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்படும். அவற்றில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வேறு இடத்தில் இடம் ஒதுக்கி கொடுக்கப்படும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story