கும்மிடிப்பூண்டி அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்தது ஏனாதிமேல் பாக்கம் ஊராட்சி. இங்கு உள்ள 4-வது வார்டான ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதியில் 470 மீட்டர் தூரம் உள்ள தார் சாலை தற்போது மிகவும் பழுதடைந்து சேறும் சகதியுமாக நோய் பரப்பும் காரணியாக இருந்து வருகிறது.
பள்ளி செல்லும் குழந்தைகளும், வயதானவர்களும் சாலையில் சேறுடன் தேங்கி கிடக்கும் சாக்கடை நீரில் நடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சாலையின் இருபுறமும் உள்ள குடியிருப்பு வாசிகள் தொடர் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.
பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ள இந்த தார் சாலையை சீரமைக்க வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று சேறும் சகதியுமாக உள்ள அந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்களது கோரிக்கை தொடர்பாக கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
Related Tags :
Next Story