தொட்டபெட்டா சாலையை சீரமைக்கும் பணி மும்முரம்


தொட்டபெட்டா சாலையை சீரமைக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 24 Nov 2021 7:36 PM IST (Updated: 24 Nov 2021 7:36 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் சேதம் அடைந்த தொட்டபெட்டா சாலையை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அங்கு மண்சரிவை தடுக்க தடுப்புச்சுவர் கட்டப்படுகிறது.

ஊட்டி

தொடர் மழையால் சேதம் அடைந்த தொட்டபெட்டா சாலையை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அங்கு மண்சரிவை தடுக்க தடுப்புச்சுவர் கட்டப்படுகிறது.

சாலை பெயர்ந்தது

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் வழியில் தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து மலைச்சிகரம் செல்லும் சாலை பெயர்ந்து விழுந்தது. அதன் அடிப்பகுதியில் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட குழாய் சேதமடைந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

இதனால் தொட்டபெட்டா மலைச்சிகர சுற்றுலா தலம் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டு உள்ளது. தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து மலைச்சிகரத்துக்கு செல்ல சுமார் 2½ கிலோ மீட்டர் தூரம் உள்ளது. 

சீரமைக்க நடவடிக்கை

இந்த சாலை வனத்துறைக்கு சொந்தமானது. இங்கு வாகன நிறுத்த கட்டணம் வனத்துறை மூலம் வசூலிக்கப்படுகிறது. மேலும் மலைச்சிரக சுற்றுலா தலத்துக்கு வருபவர்களிடம் இருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தனியாக கட்டணம் வசூலித்து வருகிறது. மலைச்சிரகம் 7 மாதங்களாக மூடப்பட்டு உள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. 

மேலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதைத்தொடர்ந்து மழையால் சேதமடைந்த தொட்டபெட்டா சாலையை சீரமைக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ரூ.20 லட்சம் செலவில் தொட்டபெட்டா சாலையை சீரமைக்கும் பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

தடுப்புச்சுவர்

சாலை பெயர்ந்த இடத்தின் பக்கவாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் மண்சரிவு அகற்றப்பட்டு குழி தோண்டப்பட்டது. பின்னர் மீண்டும் மண்சரிவு ஏற்படாமல் இருக்க நீளமாக தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 22 மீட்டர் நீளம், 5 அரை மீட்டர் உயரம் என தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. 

இந்த பணி முதலில் முடிந்த பிறகு சாலையின் அடிப்பகுதியில் சேதமடைந்த பழைய மழைநீர் குழாய் அகற்றப்படுகிறது. பின்னர் புதிய குழாய் பொருத்தப்பட்டு சிலாப் போடப்படுகிறது. இதன் மூலம் சாலையில் மழைநீர் தேங்காமல் குழாய் வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளை அடுத்த 20 நாட்களில் முடித்து சுற்றுலா பயணிகளை அனுமதிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.


Next Story