விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் இடம் ஆக்கிரமிப்பு; 12 கடைகள் அகற்றம்


விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் இடம் ஆக்கிரமிப்பு; 12 கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 24 Nov 2021 4:47 PM GMT (Updated: 24 Nov 2021 4:48 PM GMT)

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த 12 கடைகள் அகற்றப்பட்டன. அப்போது கடை உரிமையாளர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம், 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றிலும் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. மேலும் சன்னதி வீதியில் கோவில் முகப்பின் கலை அழகை பாதிக்கும் வகையில் 12 தனிநபர்கள் கடை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். 
இதுகுறித்து எழுந்த புகாரின்பேரில் இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் முத்துராஜா, தாசில்தார் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சுந்தரி மற்றும் அதிகாரிகள் பலர் பொக்லைன் எந்திரத்துடன் கோவில் முகப்பில் இருந்த கடைகளை அகற்றுவதற்காக நேற்று காலை வந்தனர். 

சாலை மறியல்

இதுபற்றி அறிந்த ஆக்கிரமிப்பு கடை உரிமையாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு திரண்டு வந்து பல தலைமுறைகளாக நாங்கள் கடை வைத்து வாழ்ந்து வருகிறோம். திடீரென கடைகளை அகற்றினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் விஜயரங்கன், விஜயகுமார் மற்றும் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். 
மேலும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 12 கடைகளை அகற்ற முயன்றனர். அப்போது ஆத்திரமடைந்த கடை உரிமையாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கடை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம் கடைவீதி நான்கு வழி சாலை சந்திப்பில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர், தங்கள் மீது மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். 

கைது

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து வந்து தீக்குளிக்க முயன்றவர்களின் மீது தண்ணீரை ஊற்றி மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்ததோடு போராட்டத்தை கைவிடும்படி கேட்டனர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் ஏற்றினார்கள்.  அப்போது அந்த தனியார் பஸ்சின் கண்ணாடியை பஸ்சில் இருந்த வாலிபர் ஒருவர் அடித்து நொறுக்கினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசாா் கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து 12 கடைகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.  இருப்பினும் அந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story