ஓடை ஆக்கிரமிப்புகளை 4 வாரத்தில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஓடை ஆக்கிரமிப்புகளை 4 வாரத்தில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 24 Nov 2021 8:23 PM GMT (Updated: 24 Nov 2021 8:23 PM GMT)

அதிகாரிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும், ஓடை ஆக்கிரமிப்புகளை 4 வாரத்திற்குள் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை
அதிகாரிகள்  பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும், ஓடை ஆக்கிரமிப்புகளை 4 வாரத்திற்குள் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஆக்கிரமிப்பு
பேரையூர் தாலுகாவை சேர்ந்த ராஜாங்கம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா துள்ளுக்குட்டி நாயக்கனூர் கிராமத்திலுள்ள ஓடை மற்றும் சாப்டூர் கிராமத்திலுள்ள ஒடை ஆகியவற்றை நம்பியே அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
ஆனால், இந்த 2 ஓடைகளிலும் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளிடம் மனு அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, துள்ளுக்குட்டி நாயக்கனூர் கிராமத்திலுள்ள ஓடை மற்றும் சாப்டூர் கிராமத்திலுள்ள ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
 பொறுப்புகளை உணர்ந்து....
அப்போது நீதிபதிகள், அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். அனைத்து பொறுப்புகளையும், வேலைகளையும் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஏற்க முடியுமா? என கேள்வி எழுப்பினர்.
மேலும் உசிலம்பட்டி வருவாய் மண்டல அலுவலர், பேரையூர் தாசில்தார் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஓடைகளை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி 4 வாரத்திற்குள் ஓடைகளை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். 
இதற்கான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story