சேலத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி:தீயணைப்புத்துறை கூடுதல் இயக்குனர் நேரில் ஆய்வு
சேலத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலியான இடத்தை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் கூடுதல் இயக்குனர் விஜயசேகர் நேரில் ஆய்வு செய்தார்.
சேலம்:
சேலத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலியான இடத்தை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் கூடுதல் இயக்குனர் விஜயசேகர் நேரில் ஆய்வு செய்தார்.
5 பேர் பலி
சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் விட்டல் 3-வது தெருவில் கோபி என்பவரது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் கோபி மற்றும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலராக பணியாற்றி வந்த பத்மநாபன், முருகன், கணேசன், மோகன்ராஜ் உள்ளிட்ட 6 பேரின் வீடுகள் அடுத்தடுத்து இடிந்து தரைமட்டமாயின.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி தீயணைப்பு நிலைய அதிகாரி பத்மநாபன், அவருடைய மனைவி தேவி, முருகனின் மகன் கார்த்திக்ராம், கோபியின் மாமியார் எல்லம்மாள், கோபியின் தாயார் ராஜலட்சுமி ஆகிய 5 பேர் பலியானார்கள். மேலும் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணை
பத்மநாபன், அவருடைய மனைவி தேவி ஆகியோரது உடல்கள் சொந்த ஊரான பாகல்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. மற்றவர்களின் உடல்கள் சேலத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டன. இந்த விபத்து குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்ததா? அல்லது வணிக கியாஸ் சிலிண்டர் வெடித்ததா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே சம்பவ இடத்தை நேற்று முன்தினம் மாலை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். பலியான 5 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கூடுதல் இயக்குனர் ஆய்வு
விபத்து நடந்த இடத்தை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் கூடுதல் இயக்குனர் விஜயசேகர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். முன்னதாக அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு நிலைய அதிகாரி பத்மநாபனின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
ஆறுதல்
பின்னர் பத்மநாபனின் தாய், மகன், மகள் ஆகியோருக்கு விஜயசேகர் ஆறுதல் கூறினார். அப்போது தீயணைப்புத்துறை கோவை மண்டல துணை இயக்குனர் சத்திய நாராயணன், மாவட்ட அலுவலர் வேலு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சம்பவ இடத்தில் தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் வடிவேல் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பிறகு அவர் கூறுகையில், கியாஸ் சிலிண்டர் வெடித்துதான் விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், வெடி விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை என்றார்.
தீயணைப்பு அதிகாரி பத்மநாபன் மறைவுக்கு சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story