‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பெயர்ந்த பெயர் பலகை
சேலம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் கீரைக்கார தெரு உள்ளது. இந்த தெருவில் சேலம் மாநகராட்சி சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பலகை தரையை விட்டு பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும் அது தெருவை பார்த்து இல்லாமல் பெயர் பலகை திசை திரும்பிய நிலையிலும் உள்ளது. எனவே பெயர்ந்து காணப்படும் இந்த பெயர் பலகையை சரியான முறையில் வைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், கீரைக்கார தெரு, சேலம்.
===
பள்ளியில் தேங்கி கிடக்கும் மழைநீர்
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே மருதிப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு அம்பேத்கர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். மழைக்காலங்களில் இப்பள்ளி நுழைவு பகுதியில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துடன் அதனை கடந்து செல்கின்றனர். எனவே பள்ளி நுழைவு பகுதியில் தேங்கி உள்ள மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஊர்பொதுமக்கள், மருதிப்பட்டி, தர்மபுரி.
===
கழிப்பறை கட்டப்படுமா?
தர்மபுரி மாவட்டம் பெரும்பாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கழிப்பறை இடிந்து விழுந்து விட்டது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே மாணவர்கள், ஆசிரியர்களின் நலன் கருதி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து கழிப்பறை கட்டி தரவேண்டும்.
-கோகுல்ராஜ், பெரும்பாலை, தர்மபுரி.
===
வேகத்தடை வேண்டும்
சேலம் மாவட்டம் கரிக்காப்பட்டி பஸ் நிலையம் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும். சின்னப்பம்பட்டி- ஜலகண்டாபுரம் சாலையில் கரிக்காப்பட்டி பஸ்நிலையம் அருகில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உதயநிதி சரவணன், கரிக்காப்பட்டி, சேலம்.
===
பன்றிகள் தொல்லை
சேலம் மாவட்டம் எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சி கைபுதூர் கிராமத்தில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றி திரிவதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் நோய் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருக்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பன்றிகளை பிடித்து சென்றால் நோய்கள் பரவுவதை தவிர்க்கலாம்.
-ஊர்மக்கள், கைபுதூர், சேலம்.
===
கியாஸ் அடுப்பு வசதி
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா எல்லப்புடையாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கெளாப்பாறை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இன்று வரை அந்த பள்ளிக்கு கியாஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு வசதி இல்லை. தென்னை மட்டைகளை கொண்டுதான் சமையல் செய்து வருகின்றனர். இதனால் சரியான நேரத்திற்கு மாணவர்களுக்கு உணவு வழங்க முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவமுருகன், கொளப்பாறை, தர்மபுரி.
===
நோய் பரவும் அபாயம்
சேலம் கிச்சிப்பாளையம் செல்வநகர் பகுதியில் நீண்ட நாட்களாக மழைநீர் செல்ல வாய்க்கால் இல்லாததால் அங்கு மழைநீர் தேங்கி இருக்கிறது. இதனால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகிவிட்டன. மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் செல்ல வாய்க்கால் அமைத்து தரவேண்டும்.
-ஊர்மக்கள், கிச்சிப்பாளையம், சேலம்.
====
பெயர் பலகை வேண்டும்
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி மண்டலம் மணக்காடு 2-வது கிழக்கு தெருவில் பெயர் பலகை வைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை வைக்கவில்லை. இதனால் முகவரி கண்டுபிடிக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பெயர் பலகை வைக்க வேண்டும்.
- ரா.பிரதீப்சந்திரன், மணக்காடு, சேலம்.
====
தெருவிளக்கு எரியவில்லை
சேலம் மாவட்டம் மேச்சேரி சாம்ராஜ்பேட்டை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள தெருவிளக்கு 2 ஆண்டுகளாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். மேலும் குழந்தைகள், பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். இதுபற்றி புகார் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி தெருவிளக்கு எரியச் செய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், சாம்ராஜ்பேட்டை, சேலம்.
===
தெருநாய்கள் தொல்லை
நாமக்கல் மாவட்டம் 11-வது வார்டுக்கு உட்பட்ட ராமாபுரம் புதூர், குட்டை தெருவில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது. அந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சாலையில் அங்கும் இங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் நிகழ்கின்றன. மேலும் நடந்து செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கின்றன. இதனால் அந்த பகுதியில் தெருநாய்களால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்ல வேண்டும்.
-ஊர்மக்கள், ராமாபுரம் புதூர், நாமக்கல்.
=======
பண்ணை குட்டைக்கு எதிர்ப்பு
நாமக்கல் மாவட்டம் நவணி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பண்ணை குட்டைகளை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களை பயன்படுத்தி குட்டைகளை வெட்டாமல் பொக்லைன் எந்திரம் மூலம் பண்ணை குட்டைகள் அமைக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப்பணியாளர்களுக்கு பணியை வழங்க வேண்டும்.
-பொதுமக்கள், நவணி, நாமக்கல்.
===
Related Tags :
Next Story