மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனை நர்சு அடித்து கொலை + "||" + Government hospital nurse beaten to death

அரசு மருத்துவமனை நர்சு அடித்து கொலை

அரசு மருத்துவமனை நர்சு அடித்து கொலை
ஆண்டிப்பட்டியில், அரசு மருத்துவமனை நர்சு அடித்து கொலை செய்யப்பட்டார்.
ஆண்டிப்பட்டி:

அரசு மருத்துவமனை நர்சு

திண்டுக்கல் பாரதிபுரம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவர், திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள ஓட்டலில் சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (வயது 46). 

இவர், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இதனையடுத்து அவர், ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் செல்வி வசித்து வந்தார்.

 தனியாக வசித்து வந்தார்

சுரேஷ்-செல்வி தம்பதிக்கு ஹரிகரன் என்ற மகனும், கமலி என்ற மகளும் உள்ளனர். ஹரிகரன், நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கமலி, திண்டுக்கல்லில் தனது தந்தையுடன் தங்கியிருந்து அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார்.

ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த சில ஆண்டுகளாக செல்வி மட்டும் தனியாக வசித்து வந்தார். அங்கிருந்தபடியே ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அவர் பணிக்கு சென்று வந்தார்.

 செல்போனை எடுக்கவில்லை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேஷ், செல்வியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் செல்போனை எடுக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஆண்டிப்பட்டியில் வசிக்கிற தனது உறவினர்களிடம் தொடர்பு கொண்டு செல்வியை வீட்டில் போய் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்பேரில் அவருடைய உறவினர்கள், செல்வி வசித்த வீட்டுக்கு சென்றனர். 

அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வீட்டுக்குள்ளே விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மின்விசிறி ஓடி கொண்டிருந்தது. ஆனால் செல்வியின் பெயரை சொல்லி பலமுறை அழைத்தும் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.

 அடித்து கொலை

இதனையடுத்து வீட்டின் கதவை உடைத்து உறவினர்கள் உள்ளே சென்றனர். அங்கு பூஜை அறையில், ரத்த வெள்ளத்தில் செல்வி பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை மர்ம நபர் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்ககிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வெற்றி வரவழைக்கப்பட்டது. அது, வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி 200 மீட்டர் தூரத்துக்கு ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. 

கொலையாளியுடன் போராட்டம்

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, செல்விக்கு நன்றாக தெரிந்த நபரே இந்த கொலையை செய்திருக்கக்கூடும் என்று போலீசார் கருதுகின்றனர். 2 பேரும் பேசி கொண்டிருந்தபோது திடீரென கொலையாளி அவரை தாக்கி இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.

பூஜை அறை, படுக்கை அறையில் பொருட்கள் சிதறி கிடந்ததால் கொலை செய்யப்படுவதற்கு முன்பு செல்வி அந்த நபருடன் போராடி இருக்கிறார்.

 காரணம் என்ன?

வீட்டில் இருந்த பீரோவில் துணிகள் சிதறி கிடந்தன. ஆனால் அதில் இருந்த தங்க சங்கிலி அப்படியே இருந்தது. இதேபோல் செல்வி அணிந்திருந்த தங்க சங்கிலி, தோடு ஆகியவற்றை மர்ம நபர் கழற்றி செல்லவில்லை. இதனால் நகை, பணத்துக்காக இந்த கொலை நடைபெறவில்லை என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். 

அதேநேரத்தில் இந்த கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 மாயமான செல்போன்

கொலை செய்யப்பட்ட செல்வியின் செல்போன் மாயமாகி விட்டது. அந்த செல்போனை கொலையாளியே எடுத்து சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது, அந்த செல்போன் ‘சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலை வழக்கில் துப்புத்துலக்க செல்போனை துருப்புச்சீட்டாக போலீசார் பயன்படுத்துகின்றனர். செல்வியின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர்கள் மற்றும் செல்வி பேசிய நபர்கள் குறித்த பட்டியலை போலீசார் சேகரித்துள்ளனர். அதனை அடிப்படையாக கொண்டு போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.  
  
இதேபோல் செல்வி வசித்த குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து, அதன் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது. 

செல்வி குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு 3 மாடிகளை கொண்டது. அங்கு மொத்தம் 9 வீடுகள் உள்ளன. அங்கு வசிப்போரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.