தலையில் சிக்கிய குடத்துடன் கிணற்றுக்குள் தவறி விழுந்த நாய் தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்


தலையில் சிக்கிய குடத்துடன் கிணற்றுக்குள் தவறி விழுந்த நாய் தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்
x
தினத்தந்தி 27 Nov 2021 9:44 PM IST (Updated: 27 Nov 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு அருகே, தலையில் சிக்கிய குடத்துடன் கிணற்றுக்குள் தவறி விழுந்த நாயை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.


கொடைரோடு:

தலையில் சிக்கிய சில்வர் குடம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ராமராசபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் மீதமாகும் உணவு மற்றும் ஊறல் தண்ணீரை வீட்டின் வெளியே ஒரு சில்வர் குடத்தில் ஊற்றி வைப்பது வழக்கம்.இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி தெரு நாய் ஒன்று, அந்த சில்வர் குடத்திற்குள் தலையை நுழைத்து அதில் இருந்த உணவை தின்றது. அதன்பிறகு நாயால் குடத்தில் இருந்து தலையை வெளியே எடுக்க முடியவில்லை. குடத்துக்குள் நாயின் தலை சிக்கி கொண்டது. இதையடுத்து அந்த நாய், தெருக்களில் அங்கும் இங்குமாக வெறிப்பிடித்தது போல ஓடியது. அந்த நாயால் சாப்பிட முடியவில்லை. கண் தெரியாததால் தான் போகும் பாதையும் அதற்கு தெரியவில்லை.

கிணற்றுக்குள் விழுந்த நாய்

தலையில் மாட்டிய குடத்துடன் அலைந்து திரிந்த அந்த நாய், ஊரின் அருகே ஒரு கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. ஆனால் இது குறித்து பொதுமக்கள் யாருக்கும் தெரியவில்லை. இந்தநிலையில் நேற்று கிணற்றுக்குள் இருந்து வந்த நாயின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் எட்டி பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் நாய் உயிருக்கு போராடுவது தெரியவந்தது. இதையடுத்து கிராமமக்கள் அந்த நாயை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. 

உயிருடன் மீட்பு

இதுகுறித்து அப்பகுதி மக்கள், நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு நேற்று தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், தண்ணீர் இல்லாத சுமார் 100 அடி ஆழமுள்ள  கிணற்றுக்குள் இறங்கி  நாயை உயிருடன் மீட்டனர். பின்னர் சில்வர் குடத்துக்குள் சிக்கியிருந்த நாயின் தலை வெளியே எடுக்கப்பட்டது. வாய் இருந்தும் சாப்பிட முடியாமலும், விழி இருந்தும் பார்க்க முடியாததுமாய் 3 நாட்களாக சிக்கி தவித்த அந்த நாய், நிம்மதி பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story