திருவையாறு, திருக்காட்டுப்பள்ளியில் கனமழை


திருவையாறு, திருக்காட்டுப்பள்ளியில் கனமழை
x
தினத்தந்தி 27 Nov 2021 8:27 PM GMT (Updated: 27 Nov 2021 8:27 PM GMT)

திருவையாறு, திருக்காட்டுப்பள்ளியில் கனமழையால் வயல்கள் மூழ்கி பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

திருவையாறு;
திருவையாறு, திருக்காட்டுப்பள்ளியில் ெகாட்டித்தீர்த்த கனமழையால் வயல்கள் மூழ்கி பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 
கனமழை
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டித்தீர்த்து வருகிறது. திருவையாறு அடுத்த மருவூர் கிராமத்தில் உள்ள காளியம்மன்கோவில் தெருவில் தொடர் மழையின் காரணமாக தெருக்களில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழைநீர்  வடிய வசதி இல்லாதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கும் மிகவும் அச்சப்படுகிறார்கள். மழை தண்ணீரில் நனைந்து செல்வதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. 
திருவையாறு அருகே கீழத்திருப்பந்துருத்தி செபஸ்தியார் கோவில் தெருவில் ஏசுதாஸ் என்பவர் தன் மகள் மகன் மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையினால் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சுவர் எதிர் புறம்  விழுந்ததனால் அனைவரும்  உயிர் தப்பினர். 
காட்டுக்கோட்டை
திருவையாறு அடுத்த காட்டுக்கோட்டை கிராமத்தில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்து உள்ளது இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.  கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சம்பா தாளடி நெற்பயிர் மூழ்கி சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. காட்டுக்கோட்டை- காந்திநகர் சாலை குறுக்கே குழாய் அமைத்து தரை பாலம் போடப்பட்டுள்ளது. குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீர் வெளியேற முடியாமல் சாலை மேல் கடந்து செல்கிறது. இதனால் சாலை அரிப்பெடுத்து உடையும் நிலை ஏற்பட்டு வருகிறது. குழாயில் ஏற்பட்ட அடைப்பினால் காட்டுக்கோட்டை மஞ்சானித்தெரு, காளியம்மன் கோவில் தெருவில் தொகுப்பு வீட்டிற்குள் மழை நீர் புகுந்து உள்ளது.
பயிர்கள் அழுகும் நிலை
திருவையாறு அடுத்த மேலத்திருப்பந்துருத்தியை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா தாளடி நெல்  கடந்த 2 நாட்களாக பெய்யும் மழையால் சேதமடைந்து உள்ளது. 
கனமழை பெய்வதால் கோனகடுங்கால் ஆறு நிரம்பி வழிந்து அந்தலி, குழிமாத்தூர், திருவாலம்பொழில், நடுக்காவேரி, மேலத்திருப்பந்துருத்தி, கீழதிருப்பந்துருத்தி பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு கடல் போல் காட்சியளிக்கிறது. விவசாயிகள் தங்கள் வயல் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்டறிய முடியாமல் தவிக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் செலவு செய்து நடவு செய்த வயலில் தற்போது மழைநீர் வடியாமல் இருப்பதனால் பயிர்கள் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. 

Next Story