மாவட்ட செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் - அரசு அதிரடி நடவடிக்கை + "||" + Restrictions in Karnataka to prevent corona spread

கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் - அரசு அதிரடி நடவடிக்கை

கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் - அரசு அதிரடி நடவடிக்கை
கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க கர்நாடகத்தில் மீண்டும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பசவராஜ்பொம்மை தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிப்பு

  பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் சமீப காலமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தது. இந்த நிலையில், தார்வாரில் உள்ள மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள், பேராசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. தார்வார் மருத்துவ கல்லூரியில் நேற்று வரை 281 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 1,800-க்கும் மேற்பட்டோருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கை வரவேண்டி உள்ளது.

  இதுபோல், பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லில் உள்ள ஒருகல்லூரியிலும் மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் உள்பட 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல் பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் 33 குழந்தைகளுக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

  கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு திடீரென்று அதிகரித்து வருவதாலும், குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்பு மாணவ, மாணவிகள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவதும் ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

பசவராஜ்பொம்மை ஆலோசனை

  இந்த நிலையில் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மந்திரிகள், அரசு அதிகாரிகள், நிபுணர்கள் குழுவினருடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று மாலையில் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

   இந்த ஆலோசனை கூட்டத்தில் மந்திரிகள் சுதாகர், அஸ்வத் நாராயண், நாகேஷ், தலைமை செயலாளர் ரவிக்குமார், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா, சுகாதாரத்துறை அதிகாாிகள் கலந்து கொண்டனர்.

7 மாவட்ட கலெக்டர்கள்

  பின்னர் கொரோனா பரவி வரும் தார்வார், தட்சிண கன்னடா, உடுப்பி, பெங்களூரு, குடகு, சாம்ராஜ்நகர், பெங்களூரு புறநகர் ஆகிய 7 மாவட்ட கலெக்டா்களுடன் காணொலி காட்சி மூலமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

  அந்த மாவட்டங்களில் கொரோனா பரவுவதை தடுக்க தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தவும் கலெக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

  இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

  கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரளா, மராட்டிய மாநிலங்களில் தற்போதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் கேரளா, மராட்டிய மாநில எல்லை பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்படுகிறது.

  குறிப்பாக கேரளா எல்லையையொட்டி உள்ள தட்சிணகன்னடா, குடகு, மைசூரு, சாம்ராஜ்நகர் ஆகிய 4 மாவட்டங்களின் எல்லைப்பகுதிகளில் சோதனை சாவடி அமைத்து, அந்த மாநிலத்தில் இருந்து வருபவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கேரளா, மராட்டிய மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை அறிக்கையும் (நெகட்டிவ் சான்றிதழ்) கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

7 நாட்களுக்கு பின்பு...

  கேரளாவில் இருந்து 16 நாட்களுக்கு முன்பு வந்திருந்த மாணவ, மாணவிகள் ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்திருந்தாலும், மீண்டும் ஒரு முறை அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் 2 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாகும். விடுதிகளில் தங்கி இருப்பவர்கள் ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்திருந்து நெகட்டிவ் வந்திருந்தாலும், 7 நாட்களுக்கு பின்பு மீண்டும் ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாகும்.

  நர்சிங் உள்ளிட்ட பிற கல்லூரிகளுக்கு கேரளாவில் இருந்து அடிக்கடி மாணவ, மாணவிகள் வந்து செல்வதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும், முன் எச்சரிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. மருத்துவ கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகளில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊழியர்கள் 2 முறை தடுப்பூசி

  இதுதவிர மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள், வணிகவளாகங்கள், ஓட்டல்கள், தியேட்டர்களில் பணியாற்றும் வேலை ஆட்கள், பிற ஊழியர்கள் கண்டிப்பாக 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை வேலைக்கு அனுமதிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் கொரோனா பரவலை கண்காணிக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

  பள்ளி, கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால், மாணவ, மாணவிகளின் பெற்றோரும் வருகை தருகிறார்கள். அதனால் தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகளை ஒத்திவைக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி பெற்றிருந்தாலும், விதிமுறைகளை கடைப்பிடிப்பது கட்டாயமாகும். இதற்கான தனி கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல் நெறிமுறைகள் பள்ளி கல்வித்துறை சார்பில் வெளியிடப்படும்.

திருமண நிகழ்ச்சிகளில்...

  பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தற்போது நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணிவது இல்லை என்று தெரியவந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். அதனால் திருமண நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். இதனை அதிகாரிகள் கண்காணிப்பது கட்டாயமாகும். இதுதொடர்பாக விரிவான வழிகாட்டுதல்கள் நாளை (அதாவது இன்று) வெளியிடப்படும்.

  கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதற்கு இன்னும் சில நாட்கள் இருப்பதல், தற்சமயம் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஏனெனில் புத்தாண்டு கொண்டாட்டம் விமரிசையாக நடைபெறும். அதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தை எப்படி கொண்டாடுவது, கட்டுப்பாடுகள் குறித்து சிலநாட்கள் கழித்து முதல்-மந்திரி தலைமையில் தனியாக ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.

வெளிநாட்டு பயணிகள் கண்காணிப்பு

  தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் நாடுகளில் தற்போது ஒமிக்ரான் என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ், இதற்கு முன்பு இருந்த கொரோனா வைரசை காட்டியிலும் 5 மடங்கு வேகமாக பரவும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கவும், கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  பெங்களூருவில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் யாரும் இல்லை. கர்நாடகத்தில் முன்கள பணியாளர்கள் அனைவரும் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளனர். அந்த முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு, கர்நாடகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தால், முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்படும்.
  இவ்வாறு மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

கொரோனா பரிசோதனை தீவிரம்

  புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் மற்றும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கர்நாடகத்தில் உள்ள அனைத்து பஸ், ரெயில் நிலையங்களிலும் மீண்டும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்ெகாள்ளும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

  பெங்களூருவை பொறுத்தவரை பெங்களூரு கே.எஸ்.ஆர். சிட்டி ரெயில் நிலையத்தில் ரெயில் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த 7 மாவட்டங்கள் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் கர்நாடக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.