‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 29 Nov 2021 10:59 AM GMT (Updated: 29 Nov 2021 10:59 AM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அச்சுறுத்தும் மின்சார கேபிள்

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3-வது தெருவில் மின் இணைப்பு பெட்டியில் புதிதாக வயர்கள் பொருத்தப்பட்டன. ஆனால் இதன் இணைப்பு வயர்களை பூமிக்குள் புதைக்காமல் அலட்சியமாக போட்டு வைத்துள்ளார்கள். குழந்தைகள் தெருவில் விளையாடுகிறார்கள். எனவே ஆபத்தை உணர்ந்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முத்துசாமி, நேதாஜி நகர்.



மதகை திறக்க வேண்டும்

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகா பரணிபுத்தூர் அய்யப்பந்தாங்கல் ஊராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்புக்குள்ளும் மழைநீர் சூழ்ந்துள்ளது. போரூர் இரட்டை ஏரி மதகு அடைக்கப்பட்டது இதற்கு காரணம். எனவே இந்த மதகை திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜி.நடராஜன், பரணிபுத்தூர்.

கட்டமைப்பு வசதிகள் தேவை
சென்னை கொட்டிவாக்கம் லட்சுமண பெருமாள் நகரில் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் வசதி முறையாக இல்லை. இதனால் மழை காலம் வந்தாலே தண்ணீர் தேங்கி மிகுந்த சிரமம் அடைகிறோம். இப்பகுதியில் தற்போது தேங்கி உள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் மழை காலங்களில் தண்ணீர் தேங்காதவாறு உரிய தீர்வு காணப்பட வேண்டும்.

- லட்சுமண பெருமாள் நகர் குடியிருப்போர் சங்கம்.

ஆதம் மார்க்கெட்டின் அவலம்

சென்னை திருவல்லிக்கேணி ஆதம் மார்க்கெட் மழைநீரால் சூழப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தொடர்ந்து தேங்கி உள்ளது. தற்போது மழைநீர் கழிவுநீர் போன்று காட்சி அளிக்கிறது. சுகாதார சீர்கேடாக உள்ளது. இதனால் நாங்களும், வாடிக்கையாளர்களும் இன்னல் அடைகிறோம். அதிகாரிகள் கவனிப்பார்களா?

- வியாபாரிகள்.




மின்விளக்குகள் எரியவில்லை

சென்னை வில்லிவாக்கம் தாதங்குப்பம் காமராஜர் தெருவில் மின் விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் அச்சத்துடன் வெளியே சென்று வரும் நிலைமை இருக்கிறது.

- பொதுமக்கள், தாதங்குப்பம்.

கழிவுநீர் கசிவால் அவதி

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பாலவிநாயகர் நகரில் பாலு தெருவில் கழிவுநீர் கசிந்து பட்டேல் தெருவில் செல்வதால் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கோபி, திருவள்ளூர்.

கால்வாயில் கழிவுநீர் கலப்பு

செம்பரம்பாக்கம் மற்றும் போரூர் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் கால்வாய் பாய்கடை, தட்டாங்குளம், எம்.ஆர்.கே நகர் வழியாக மணப்பாக்கம் அருகே அடையாறு ஆற்றில் சென்று கலக்கிறது. இந்த கால்வாயை முறையாக பராமரிக்காததால் தற்சமயம் கால்வாய் நிரம்பி எம்.ஆர்.கே நகரில் உள்ள வீடுகளில் புகுந்து வெளியே நடமாடமுடியாத அளவிற்கு உள்ளது. கால்வாய்க்கு அருகில் உள்ள நபர்கள் கால்வாயில் கழிவுநீரை செலுத்துகின்றனர். இதனால் நிலத்தடி நீரும் மாசடைகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராமலட்சுமி, எம்.ஆர்.கே.நகர்.

இடி விழுந்து மின்சார மீட்டர் சேதம்

பள்ளிக்கரணை டாக்டர் அம்பேத்கர் தெருவில் மசூதி எதிரே உள்ள வீட்டு எண்-22-ல் தென்னை மரத்தின் மீது இடி-மின்னல் தாக்கியது. இதனால் வீட்டில் இருந்த மின்சார மீட்டர் கருகி போய் உள்ளது. பழுதாகி உள்ள மின்சார மீட்டரை மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சரிசெய்து தர வேண்டும்.

- ஜனார்த்தனன், பள்ளிக்கரணை.

கழிவுநீர் கால்வாயில் அடைப்பு

சென்னை புளியந்தோப்பு திரு.வி.க. நகர் 4-வது தெருவில் தேங்கிய மழைநீரில் கழிவுநீரும் சேர்ந்து இன்னமும் வடியாமல் இருக்கிறது. இதற்கு கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு தான் காரணம். இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?

- பொதுமக்கள், புளியந்தோப்பு




மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு

சென்னை திருவொற்றியூர் வடக்கு மாடவீதியில் நிறைய மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இந்த மாடுகள் இரைத்தேடி சாலையில் உலா வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் செல்லும் நிலைமை இருக்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து சென்று அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

- செந்தில் ராஜா, திருவொற்றியூர்.

மழைநீர் சூழ்ந்த மண்ணடி

சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட மண்ணடி பகுதி முழுவதும் முறையான சாலை வசதி செய்துதரப்படாததால் தற்போது மழைநீர் சூழ்ந்த பகுதியாகவே மண்ணடி மாறியிருக்கிறது. பல இடங்களில் மழைநீரில் குப்பை கழிவுகளும் சேர்ந்து சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகின்றன. கொசுக்கள் படையெடுப்பும், எலிகளின் தொல்லையும் மக்களை படாதபாடு படுத்தி வருகிறது. இந்த தொல்லைகளை போக்கி மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?

- பிலால், துறைமுகம்.

வடிகால்வாய் மூடி சேதம்

சென்னை வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாத நகர் முதல் பிரதான சாலையில் உள்ள மழைநீர் வடிகால்வாய் மூடி சேதமடைந்த நிலையில் காட்சி தருகிறது. அபாயத்தை தெரியப்படுத்தும் வகையில் அருகில் உள்ள கம்பும், கட்டைகளும் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே விபரீத சம்பவங்கள் நடைபெறும் முன்பாக அந்த மழைநீர் வடிகால்வாய் மூடியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- த.சேகர், ஜெகநாத நகர்.




Next Story