தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 29 Nov 2021 7:37 PM GMT (Updated: 29 Nov 2021 7:37 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

 கால்நடை டாக்டர் வேண்டும்
தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரம் கால்நடை மருத்துவமனைக்கு உட்பட்ட பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை நோய் தாக்கும்போது ஊரணிபுரத்தில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு தான் செல்ல வேண்டும்.  இங்கு கடந்த நான்கு மாதங்களாக கால்நடை டாக்டர் இல்லை. தற்போது கோமாரி நோய் அதிகம் பரவி வருவதால் சிகிச்சை அளிக்க முடியாமல் விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கால்நடை டாக்டரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ராமதுரை, வெட்டுவாக்கோட்டை.
  தார்ச்சாலை வேண்டும்
 தஞ்சை தாலுகா பிள்ளையார்நத்தம் ஊராட்சி நடுத்தெருவில் கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதியே கிடையாது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். தற்போது மழைகாலம் என்பதால் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிதாக தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.                   
  -பொதுமக்கள், பிள்ளையார்நத்தம்.
  சாலை சீரமைக்கப்படுமா?
தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் அங்கு குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் நீரால் பள்ளங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?   -சதீஷ் குமார், தஞ்சை.
  தொற்று நோய் பரவும் அபாயம்
தஞ்சை கரந்தை அருகே உள்ள சருக்கை சவேரியார் கோவில் தெருவில் மழைக்காலங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும், கனமழையின் போது மழைநீருடன், கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சவேரியார் கோவில் தெருவில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-அஷ்லி, தஞ்சை.
 குப்பைகள் அகற்றப்படுமா?
 தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கோட்டை அமிர்தகலசநாதர் கோவில் உள்ளது. இதன் அருகே கடந்த சில மாதங்களாக சிலர் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களும் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும்  சிரமப்படுகிறார்கள். மேலும் மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.                           
 -பொதுமக்கள், கும்பகோணம்.

Next Story