தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 29 Nov 2021 8:53 PM GMT (Updated: 29 Nov 2021 8:53 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

மின்கம்பம் மாற்றப்பட்டது
வெள்ளிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மாண்டிவிளை சந்திப்பில் இரும்பு மின் கம்பம் ஒன்று இருந்தது. அந்த இரும்பு மின்கம்பத்தில் அடிப்பகுதி துருப்பிடித்து, சாய்ந்த நிலையில் காணப்பட்டது. அது எப்போது வேண்டுமானாலும் கீழே சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. எனவே அந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த செய்தியும், படமும், தினந்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. அதை தொடர்ந்து புது மின்கம்பம் மாற்றி அமைத்து உள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த துறையினருக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’-க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

சீரமைக்க வேண்டிய சாலை
கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட தெருவுக்கடை அருகே உள்ள இலவன் பட விளை பகுதியில் இருந்து படுவா  குளம் செல்லும்   தார்ச்சாலை மழை வெள்ளத்தால் அரிக்கப்பட்டு, கற்களாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பும் இருக்கிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                                               - ஜெகன், தெருவுக்கடை.

கட்டிடங்கள் புனரமைக்கப்படுமா?
தடிக்காரன்கோணம் பஞ்சாயத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் பல பழுதடைந்த நிலையில் உள்ளன. அவற்றை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை கட்டிடங்கள் புனரமைப்பு பணி நடைபெறவில்லை. தற்போது குமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                        -வே.மணிகண்டன், தடிக்காரன்கோணம்.

பஸ்களில் ஊர் பெயர் பலகை
குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் சிலவற்றில் முன்பகுதியில் அந்த பஸ் செல்லும் ஊர் பெயர் பலகை இடம் பெற்று உள்ளது. ஆனால் பின்பகுதியில் பஸ் செல்லும் ஊரின் பெயர் பலகை இருப்பது இல்லை. இதனால் சில சமயங்களில் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பஸ்சின் பின்புறத்தில் உள்ள பெயர் பலகையை பார்த்து பலரும் பஸ்சில் ஏறுவது வழக்கம். அது எந்த ஊருக்கு செல்கிறது என்பது தெரியாததால் பயணிகள் அதில் ஏறுவது இல்லை. எனவே பஸ்சின் இரு பகுதியிலும் பெயர் பலகை அமைக்கவும், இரவு நேரத்தில் அந்த பெயர் பலகை தெரியும்படி விளக்கு எரியவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                            -கலையன்பன், ஆரல்வாய்மொழி.

மக்கள் அவதி
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல கிராமங்களில் சாலைகள் சேதம் அடைந்து உள்ளது. இதனால் பஸ்கள் மற்றும் பிற வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். பாதசாரிகளின் நிலையை கேட்கவே வேண்டாம். எனவே மாவட்டத்தில் சேதம் அடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                                -அனந்த நாராயணன், மருங்கூர்.


Next Story