மழைநீரில் வழுக்கி விழுந்து விட்டதாக தகவல்: இளம்பெண் மர்ம சாவு - கணவரிடம் விசாரணை


மழைநீரில் வழுக்கி விழுந்து விட்டதாக தகவல்: இளம்பெண் மர்ம சாவு - கணவரிடம் விசாரணை
x
தினத்தந்தி 30 Nov 2021 2:52 PM IST (Updated: 30 Nov 2021 2:52 PM IST)
t-max-icont-min-icon

புரசைவாக்கத்தில் இளம்பெண் மர்மமாக இறந்து போனார். அவர் மழைநீரில் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவருடைய கணவரிடம் விசாரணை நடக்கிறது.

சென்னை,

சென்னை புரசைவாக்கம் வெள்ளாள தெருவைச்சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 33). இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி பெயர் ஹேமாவதி (24). இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. வினோத்குமார், சென்னை கொளத்தூரில் உள்ள விளம்பர நிறுவனம் ஒன்றில் புகைப்பட கலைஞராக வேலை செய்கிறார்.

வினோத்குமார்-ஹேமாவதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். விவாகரத்து கேட்டு, ஹேமாவதி வழக்கு போட்டதாக தெரிகிறது. பின்னர் இருதரப்பு உறவினர்களும் கலந்துபேசி இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர். விவாகரத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மழைநீரில் வழுக்கி விழுந்து காயம் அடைந்து விட்டதாக ஹேமாவதியை, வினோத்குமார் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் டாக்டர்கள், ஹேமாவதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஹேமாவதியின் தந்தை, தனது மகளை வினோத்குமார் கொலை செய்து விட்டதாக கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆர்.டி.ஓ. விசாரணை நடப்பதாகவும், மேலும் பிரேத பரிசோதனை முடியாததால், ஹேமாவதி எப்படி இறந்தார்? என்ற முடிவுக்கு வரமுடியவில்லை என்றும், வினோத்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

உதவி கமிஷனர் ரமேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வள்ளி சந்தேக மரணம் என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Next Story