தனியார் பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி


தனியார் பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி
x
தினத்தந்தி 2 Dec 2021 5:31 PM GMT (Updated: 2 Dec 2021 5:31 PM GMT)

விழுப்புரத்தில் தனியார் பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், அந்த பஸ்சை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஊரல்கரைமேடு அரவிந்த் நகரை சேர்ந்தவர் சேகர் மகன் அர்ஜூணன் (வயது 28), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி கல்பனா (25). இவர்களுக்கு 1½ வயதில் கபிலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. கார்த்திகை மாதம் 1-ந் தேதியன்று அர்ஜூணன், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார். அவர் அடுத்த வாரம் சபரிமலை கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருந்தார்.
அர்ஜூணன், விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஆட்டோ நிறுத்தத்தில் தனது ஆட்டோவை நிறுத்தி ஓட்டி வந்தார். நேற்று இரவு 8 மணியளவில் பானாம்பட்டு பாதை நிறுத்தத்தில் இருந்து மணிமேகலை தெருவுக்கு சவாரி சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் பானாம்பட்டு பாதை ஆட்டோ நிறுத்தத்துக்கு புறப்பட்டார்.

தனியார் பஸ் மோதி சாவு

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் பானாம்பட்டு பாதை நிறுத்தத்திற்கு அருகில் இரவு 8.20 மணியளவில் அவரது ஆட்டோ செல்ல முயன்றபோது அந்த சமயத்தில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த ஆட்டோவின் மீது மோதியது.
இதில் ஆட்டோவில் இருந்து நிலைதடுமாறி அர்ஜூணன் கீழே விழுந்ததில் பஸ்சின் பின்சக்கரம் அவரது மீது ஏறியதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்ததும் தனியார் பஸ்சை நடுரோட்டிலேயே நிறுத்தி விட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

பஸ்சுக்கு தீ வைப்பு

இதையறிந்ததும் அருகில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். விபத்தில் அர்ஜூணன் இறந்த செய்தியை கேள்விப்பட்டதும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் அலறியடித்துக்கொண்டு அங்கு ஓடி வந்தனர். அர்ஜூணன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.
மேலும் தனியார் பஸ் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்றும், பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியதை அறிந்ததும் ஆத்திரமடைந்த அர்ஜூணனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் அந்த தனியார் பஸ்சின் மீது கல்வீசி தாக்கியும், உருட்டுக்கட்டையாலும் அடித்து நொறுக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகளும் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கி சேதமடைந்தது. அதோடு ஆத்திரம் தீராத அவர்கள், பஸ்சிற்குள் சென்று பின்பக்க இருக்கைகளில் பெட்ரோலை ஊற்றி பஸ்சுக்கு தீ வைத்து கொளுத்தினர். இதில் மளமளவென தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

போலீசாருடன் வாக்குவாதம்

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த பஸ்சின் மீது தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் முடியாததால் உடனடியாக விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும் பஸ்சின் பின்பக்க பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது.
பின்னர் விபத்தில் பலியான அர்ஜூணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். அதற்கு அர்ஜூணனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், போலீசாரை தடுத்து நிறுத்தி அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

சாலை மறியல்

மேலும் ஆத்திரமடைந்த அர்ஜூணனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அர்ஜூணனின் உடலை நடுரோட்டிலேயே வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடப்பதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதை கேட்டறிந்த போலீசார், விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், தொடர்ந்து இப்பகுதியில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
அதன் பிறகு இரவு 9.15 மணியளவில் அவர்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், அர்ஜூணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அந்த தனியார் பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தி தாலுகா போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.
இந்த சம்பவத்தினால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story