“தடுப்பூசிதான் உயிர்காக்கும் கருவி”-மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


“தடுப்பூசிதான் உயிர்காக்கும் கருவி”-மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2021 7:26 PM GMT (Updated: 2 Dec 2021 7:26 PM GMT)

11 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுகிறது என்றும், தடுப்பூசிதான் உயிர்காக்கும் கருவி எனவும் மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

மதுரை, 

11 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவுகிறது என்றும், தடுப்பூசிதான் உயிர்காக்கும் கருவி எனவும் மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

பரிசோதனை மையம்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மதுரை விமான நிலையம் வந்தார். பின்னர் அவர், அங்கு வெளிநாட்டு பயணிகளுக்கான ஒமைக்ரான் ெகாேரானா வைரஸ் பரிசோதனை மையத்தை தொடங்கி வைத்தார். 
அப்போது, அமைச்சர் மூர்த்தி, மருத்துவத்துறை ெசயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன். மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரத்தினவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இதைதொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேகமாக பரவி வருகிறது

தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டிருப்பது உலகை உலுக்கி உள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸ்களை விட ஒமைக்ரான் வைரஸ் அதிபயங்கரமானது. இந்த வைரஸ் வந்துவிடாமல் இருக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விமான நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
11 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி, வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கிறோம். அவர்களுக்கு விமான நிலையத்தில் பரிசோதனையும் செய்யப்படுகிறது. அவர்களின் வருகை தொடர்பாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்படுகிறது.

477 பேருக்கு பரிசோதனை

2-ந் தேதி இரவு வரை அந்த 11 நாடுகளில் இருந்து தமிழகத்தில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்களுக்கு 477 பேர் வந்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை.
இனி வருபவர்களுக்கும் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் வரும் வரை பயணிகள் விமான நிலையத்தில் உள்ள தனி அறையில் காத்திருக்க வேண்டும்.
வீட்டிற்கு சென்றாலும் 7 நாள் தனிமையில் இருக்க வேண்டும். அவர்களை கண்காணிக்க சுகாதாரத்துறை சார்பில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என உறுதியான பின்னரே அவர்கள் வெளியிடங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள்..
மதுரை விமான நிலையத்திற்கு வரும் நபர்களுக்கு பாதிப்பு உறுதியானால் அவர்கள் மதுரை மருத்துவ கல்லூரியில் உள்ள தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் அரசு சார்பில் மரபணு பரிசோதனை மையமும் உள்ளது. அந்த மையத்தின் மூலம் வைரசின் மரபணு மாற்றங்கள் கண்டறியப்படும்.
காய்ச்சல் பரிசோதனை

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு உடல் வெப்பநிலையை அறிய திரையில் தெரியும் வகையில் புதிய தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது. 100 டிகிரி மற்றும் அதற்கும் மேல் இருந்தால் அதில் தெரிந்துவிடும்.
பள்ளிக்கூடம், சந்தை உள்பட கூட்டம் அதிகம் இருக்கும் 8 பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானால், அவர்களின் மாதிரிகளை தினமும் மரபணு சோதனைக்கு உட்படுத்துகிறோம். இருப்பினும், பொது மக்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தடுப்பூசி போட்டவர்களுக்கு உயிரிழப்பு இல்லை. எந்த கொரோனா வைரஸ் வந்தாலும் தடுப்பூசிதான் உயிர்காக்கும் கருவியாக உள்ளது. முதல் தவணை தடுப்பூசியை தமிழகத்தில் 79 சதவீதம் பேர் செலுத்தி இருக்கிறார்கள். 2-ம் தவணை தடுப்பூசியை செலுத்தியவர்களின் சதவீதம் 44-ஐ கடந்துள்ளது. தடுப்பூசிகள் அதிக அளவில் கையிருப்பு இருக்கிறது. எனவே தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.

துபாய் பயணிகளுக்கு பரிசோதனை

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தபோது, துபாயில் இருந்து மதுரைக்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 



Next Story