தற்காலிக கடை வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை


தற்காலிக கடை வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 2 Dec 2021 9:29 PM GMT (Updated: 2 Dec 2021 9:29 PM GMT)

நாகர்கோவிலில் தற்காலிக கடை வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் தற்காலிக கடை வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 
போலீசாருக்கு தொற்று
நாகர்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன் போலீஸ் உயர் அதிகாரி உள்பட 5 போலீசாருக்கு கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் அப்போது பணியில் இருந்த சக போலீசாருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. 
இந்தநிலையில், நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தினமும் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்கள். மேலும் அவர்களிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். 
 மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாநகராட்சி ஊழியர்கள் சளி பரிசோதனை செய்து வருகின்றனர். 
60 பேருக்கு சளி பரிசோதனை
கோட்டார், சவேரியார் ஆலய திருவிழாவையொட்டி அங்கு ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் வெளியூர்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள். இந்தநிலையில், தற்காலிக கடை வியாபாரிகள் மற்றும் அவற்றில் வேலை பார்க்கும் 60 பேருக்கு கொரோனா பாிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
இதேபோல் வடசேரி பஸ் நிலையத்திலும், கோட்டார் ரெயில் நிலையத்திலும் பயணிகளுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கேரளாவில் இருந்து வரும் பயணிகளிடம் பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் தடுப்பூசி எடுத்து கொண்டார்களா? என்ற விவரங்களையும் சுகாதார பணியாளர்கள் சேகரித்தனர். தடுப்பூசி போடாத பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். நாகர்கோவில் மாநகரில் நேற்று 5 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

Next Story