புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 4 Dec 2021 3:19 AM IST (Updated: 4 Dec 2021 3:19 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

சரிசெய்யப்பட்ட பாதாள சாக்கடை மூடி
சேலம் அழகாபுரம் எல்லம்மாள் காலனியில் சாலையின் நடுவே பாதாள சாக்கடையில் மூடி திறந்த நிலையில் கிடந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கினர். எனவே பாதாள சாக்கடை மூடியை சரிசெய்ய வேண்டும் என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. செய்தி வெளியான உடனே மாநகராட்சி உதவி ஆணையர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதாவது, அந்த இடத்தில் மூடி போட்டு சிமெண்டால் பூசி சரிசெய்தனர். எனவே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும், அதற்கு உதவி செய்த ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-ஊர்மக்கள், அழகாபுரம், சேலம்.

பயன்பாடு இல்லாத கிணறு
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கரிக்காப்பட்டி பஸ் நிலையம் அருகில் இருக்கும் பழமையான கிணறு மக்கள் பயன்பாடு இல்லாமல் உள்ளது. எனவே பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க இந்த கிணற்றில் நீர் இழுவை அமைத்து கிணற்றை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.உதயநிதிசரவணன், கரிக்காப்பட்டி, சேலம்.

வேகத்தடை அவசியம்
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி  ஒன்றியம் நாரைக்கிணறு பிரிவு ரோடு (காமராஜ் நகர்) பஸ் நிறுத்தத்தில் இருந்துதான் நாரைக்கிணறு மற்றும் முள்ளுக்குறிச்சி, கொல்லிமலைக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது. குறிப்பாக பிரிவு ரோடு பஸ் நிறுத்தத்தில் அரசு பள்ளிக்கூடமும் உள்ளது. எனவே பிரிவு ரோடு பஸ் நிறுத்தம் அருகில் இருபுறமும் வேகத்தடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, நாரைக்கிணறு பிரிவு ரோடு, ராசிபுரம்.

பஸ் நிலையத்தில் சரக்கு வாகனங்கள்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பஸ் நிலையத்தின் உள்ளே கார் மற்றும் சரக்கு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. மேலும் பொதுமக்களும், பயணிகளும் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட வாகனங்களை பஸ் நிலையம் உள்ளே வருவதை தவிர்க்க வேண்டும்.
-ஊர்மக்கள், இளம்பிள்ளை, சேலம்.

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
ஆத்தூர் நகர பகுதியில் முக்கிய சாலைகளில் தினமும் காலையில் இருந்து மாலை வரை 20-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றி திரிகின்றன. சாலையோரங்களில் வீசப்படும் காய்கறிகள், பூக்கள், பழங்களை தின்று விட்டு சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் இந்த மாடுகள் அத்துமீறி ஓடுவதும் உண்டு. அப்போது வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஊர்பொதுமக்கள், ஆத்தூர், சேலம்.

தார் சாலை சீரமைக்கப்படுமா?
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வி.புதுப்பாளையம் கிராமத்தில் தார் சாலை குண்டும், குழியுமாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் தெரு விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து, தெருவிளக்கு அமைத்து தரவேண்டும்.
-ஊர்மக்கள், வி.புதுப்பாளையம், நாமக்கல்.
சேலத்தை அடுத்த நேதாஜி தெருவில் சிறிய சாலையை சீரமைக்காததால் மிகவும் மோசமாக உள்ளது. இதுபற்றி புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மக்களின் நலன் கருதி இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், நேதாஜி தெரு, சேலம்.
சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள லைன்ரோடு தெற்கு தெரு, 4 ரோடு இணைப்பு ஆகிய பகுதிகளில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். புகார் கொடுத்தும் பலன் இல்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரிசெய்ய ேவண்டும்.
-ஊர்மக்கள், சேலம்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்
சேலம் முனியப்பன் கோவில் அருகில் சாலை ஓரத்தில் உள்ள குப்பைகள் அள்ளாததால் அந்த பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் நோய்கள் அதிக அளவில் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், முனியப்பன் கோவில், சேலம்.
சேலம் மாவட்டம் ஆண்டிபட்டி பஞ்சாயத்து பனங்காடு பஸ் நிறுத்தம் அருகில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியே குப்பை கிடங்கு போன்று காட்சி அளிக்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளி, குப்பைத்தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், பனங்காடு, சேலம்.

எரியாத உயர்கோபுர மின்விளக்கு
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா நடுப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட என்.எச்.7 தளவாய்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உயர் கோபுர மின் விளக்கு சுமார் 6 மாத காலமாக எரியாமல் உள்ளது. புகார் தெரிவித்தும் எந்தவித பலனும் இல்லை.  எனவே இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உயர்கோபுர மின்விளக்கை எரியச் செய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், தளவாய்பட்டி, சேலம்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி மேம்பாலத்தில் இருந்து பாலத்தின் நுழைவுவாயில் இருபுறமும் நெடுஞ்சாலை துறை மூலம் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் சரிவர எரியவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விளக்கை எரியச் செய்ய வேண்டும்.
-கா.முரளி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்.

பள்ளிக்கூடத்தை ஆக்கிரமித்த செடிகள்
சேலம் மாவட்டம் எடப்பாடி  அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காம்பவுண்டை சுற்றி அதிகளவில் செடி, கொடிகள் வளர்ந்து காடு போன்று காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. இதனால் மாணவர்களுக்கு மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் உள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை வேண்டும்.
-ஊர்மக்கள், எடப்பாடி, சேலம்.

Next Story