தேங்கி நின்ற மழை வெள்ளம் கலந்த குடிநீரை பருகிய 22 பேருக்கு வாந்தி- மயக்கம்


தேங்கி நின்ற மழை வெள்ளம் கலந்த குடிநீரை பருகிய 22 பேருக்கு வாந்தி- மயக்கம்
x
தினத்தந்தி 4 Dec 2021 2:02 PM IST (Updated: 4 Dec 2021 2:02 PM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே தேங்கி நின்ற மழை வெள்ளம் கலந்த குடிநீரை பருகிய 22 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பபட்டுள்ளனர்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூர் ஊராட்சிக்குட்பட்ட பேரண்டூர் காலனியில் 200 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கிராமத்திலுள்ள குளத்து பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் பெறப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து வைத்து குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழைக்கு குளம் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் வசிக்கும் 22 பேருக்கு திடீரென்று வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

தகவல் அறிந்த சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவஹர்லால், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன் ஆகியோர் கிராமத்துக்கு விரைந்து சென்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர். பின்னர் குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட்ட குடிநீரை பரிசோதித்து பார்த்த போது தேங்கிய மழை வெள்ளம் கலந்து வந்தது தெரியவந்தது. இதனால் 22 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ. கோவிந்தராஜன் ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிகிச்சை பெற்று வரும் 22 பேரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

குளத்தில் அமைந்திருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றி வேறு ஒரு பகுதியில் அமைக்க வேண்டும் என்று பேரண்டூர் காலனி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story