விழுப்புரம் கோர்ட்டில் நீதிபதி சாட்சியம்


விழுப்புரம் கோர்ட்டில் நீதிபதி சாட்சியம்
x
தினத்தந்தி 4 Dec 2021 2:04 PM GMT (Updated: 4 Dec 2021 2:04 PM GMT)

அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் நீதிபதி சாட்சியம் அளித்தாா்.

விழுப்புரம், 

விழுப்புரத்தை சேர்ந்த அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கு நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு தொடர்பாக முன்பு உளுந்தூர்பேட்டை மாஜிஸ்திரேட்டாக இருந்த ரவி என்பவர், சாட்சிகளிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதால் அவரும் இவ்வழக்கில் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது ரவி, கோவை மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வருகிறார். நேற்று நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதி ரவி, விழுப்புரம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். தொடர்ந்து, மற்ற சாட்சிகளின் விசாரணைக்காக இவ்வழக்கு விசாரணை மீண்டும் 6-ந் தேதி (நாளை) நடைபெறும் என்றும் நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

Next Story