கரூரில் கொட்டித்தீர்த்த கனமழை


கரூரில் கொட்டித்தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 4 Dec 2021 6:45 PM GMT (Updated: 4 Dec 2021 6:45 PM GMT)

கரூரில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வீடுகளில் மழைநீர் புகுந்தது.

கரூர், 
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது. 
இந்தநிலையில் கரூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி முதல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழையானது கரூர், தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம், வெங்கமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் 12.30 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது.
வீடுகளில் புகுந்தது
கரூரில் நேற்று 58 மி.மீட்டர் மழை பெய்தது. இதனால் சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கரூர் சுங்ககேட் கணபதி நகரில் உள்ள ஒருசில வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். வீட்டிற்குள் புகுந்த தண்ணீரை வாளியில் எடுத்து வெளியே ஊற்றி அகற்றினர். மேலும் அப்பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. அதேபோல் கரூர்-ஈரோடு சாலையில் உள்ள சஞ்சய்நகர் பகுதியில் மழைநீர் வெளியே செல்லமுடியாததால் அப்பகுதி முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டு இருந்தது.
அப்பகுதியில் இருந்த வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் வீட்டில் வைத்திருந்த மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, அப்பகுதியில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
கழிவுநீர்
இதேபோல் ராயனூர் உள்ளிட்ட கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் சூழ்ந்திருந்தது. ஆசாத்ரோடு, ராமகிருஷ்ணபுரம் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. இதேபோல் கரூரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால், சாக்கடை கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக மழைநீர் வழிந்தோட முடியாத நிலை ஏற்பட்டது. 
கழிவுநீருடன், மழைநீர் கலந்து சாலையில் பல இடங்களில் ஆறுபோல் பாய்ந்தோடியது. இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மழைநீரில் சீறிப்பாய்ந்தோடியபடி சென்றன. 
கரூர் சுங்ககேட் பகுதியில் மழைநீர் தேங்கி இருந்ததை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பார்வையிட்டார். பின்னர் மழைநீரை உடனடியாக அகற்றுமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், கூலக்கவுண்டனூர், மசக்கவுண்டனூர், காகிதபுரம்,  மூர்த்திபாளையம், நாணப்பரப்பு, புகளூர், செம்பாடம்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம், ஆகிய பகுதியில் நேற்று அதிகாலை 4 மணியளவில் பெய்த சாரல் மழை பகல் 11 மணி வரை பெய்தது.
இதனால் விவசாயம், கூலி வேலைக்கு செல்பவர்கள் தொடர் மழையின் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடக்கியிருந்தனர்.

Next Story