கரூரில் ஒரேநாளில் 34 ஆயிரத்து 948 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கரூரில் நேற்று ஒரேநாளில் 34 ஆயிரத்து 948 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கரூர்,
தடுப்பூசி முகாம்
கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி 13-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் மாவட்டத்தில் மொத்தம் 502 இடங்களில் நேற்று நடைபெற்றது.
முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றன. இதில், பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
நொய்யல்
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் குழுவினர் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போட்டனர்.
அதேபோல் சுகாதாரத்துறையினர் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.
88 சதவீத பேருக்கு தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி வரை முதல் தவணை தடுப்பூசி 7 லட்சத்து 34 ஆயிரத்து 877 பேரும், 2-வது தவணை தடுப்பூசி 4 லட்சத்து 5 ஆயிரத்து 29 பேரும் என மொத்தம் 11 லட்சத்து 39 ஆயிரத்து 906 பேர் செலுத்தி இருந்தனர்.
நேற்று நடைபெற்ற முகாம்களில் முதல் தவணை தடுப்பூசி 15 ஆயிரத்து 400 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 19 ஆயிரத்து 548 பேருக்கும் என மொத்தம் 34 ஆயிரத்து 948 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் முதல் தவணை தடுப்பூசி 88 சதவீதமும், 2-வது தவணை தடுப்பூசி 50 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story