‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 8 Dec 2021 9:56 PM GMT (Updated: 8 Dec 2021 9:56 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் பிரச்சினை 

சங்ககிரி தாலுகா அ.தாழையூர் ஊராட்சியில் மாங்குட்டபட்டி ஏரி நிரம்பி உள்ளது. இந்த ஏரியில் ராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக தரைமட்ட தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிக்கான மோட்டார் அறையில் தண்ணீர் புகுந்து விட்டது. இதனால் அ.தாழையூர் ஊராட்சி பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சி்னையை தீர்க்க வேண்டும்.
-சதீஷ்குமார், அ.தாழையூர், சேலம்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா சின்ன குரும்பட்டி காலனி  பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. பல மாதங்களாக குழாய் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் குடிநீரில் சாக்கடை நீரும் கலந்து வருகிறது. எனவே நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், சின்னக்குரும்பட்டி, தர்மபுரி.
===
பாதியில் நிற்கும் சாலை பணி

சேலம் அம்மாபேட்டை 36-வது வார்டு சுந்தரகணபதி தெருவில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சாலை புதுப்பிப்பதாக கூறி ஜல்லி கற்களை பெயர்த்து போட்டுள்ளனர். சாலைப்பணி பாதியில் நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக இந்த பகுதி மக்கள் படும் இன்னல்கள் சொல்லி மாளாது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.
-ஜி.வேலாயுதம், அம்மாபேட்டை,  சேலம்.
===
நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் கம்பத்தையன் கோவில் நடைபாதையில் தார்சாலை அமைப்பதாக சொல்லி சாலையை தோண்டி உள்ளனர். இந்த சாலை தோண்டப்பட்ட நிலையில் எந்தவொரு பணிகளும் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. இந்த சாலையில் பொதுமக்களால் நடந்து செல்லக்கூட முடியவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
-ஏ.சி.செந்தில்குமார், மாணிக்கம் பாளையம், நாமக்கல்.
===
நோய் பரவும் அபாயம்

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா மேட்டூர் செல்லும் சாலையில் பாலத்தின் அருகில் கோழிக்கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளதால் அந்த பகுதிகளில் கோழிக்கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், ஓமலூர்.
==
மயான சாலை சீரமைக்கப்படுமா?

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா பாலவாடி கிராமத்தில் மயானத்துக்கு செல்லும் பாதை மண் சாலையாக உள்ளது. இந்தப் பாதையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளதால் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் மயானத்துக்கு இறந்தவர்களை எடுத்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சம்பத், பாலவாடி, தர்மபுரி.
=====
வாகன ஓட்டிகள் அவதி

கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் பகுதியில் சாலை பழுடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக மழை நேரங்களில் சாலைகளில் உருவான பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே பழுதடைந்துள்ள இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அத்திக்ரோஸ், கிருஷ்ணகிரி.
====
குவிந்து கிடக்கும் குப்பைகள்

சேலம் இரும்பாலை 1-வது கேட் எதிரில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன. தினசரி குப்பை அள்ளுபவர்கள் வராததால் 15 நாட்களாக அந்த பகுதியில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. துர்நாற்றம் அதிகம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்துள்ள குப்பைகளை அள்ளினால் நோய் பரவுவதை தவிர்க்கலாம்.
-ஊர்மக்கள், இரும்பாலை, சேலம்.
==
பயன்பாடு இல்லாத கட்டிடம்

சேலம் பொன்னம்பாளையத்தில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டன. பின்னர் சரியான பராமரிப்பு இல்லாததாலும், அந்த கட்டிடம் கிராம மக்கள் பயன்பாட்டிற்கு வராமலும், மர்ம நபர்களின் கூடாரமாக காட்சி அளிக்கிறது. எனவே இந்த ஊராட்சி அலுவலக கட்டிடத்தை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஊர்மக்கள், பொன்னம்பாளையம், சேலம்.
===
மின்விளக்கு வசதி தேவை

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரியில் இருந்து அழகுசமுத்திரம் வரை உள்ள சாலையில் மின்விளக்கு வசதி இல்லை. சாலையின் ஓரத்தில் செடி, கொடிகள் முளைத்திருப்பதால் விஷப்பூச்சிகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த சாலை வழியாக தான் தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேட்டூர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இரவு நேரங்களில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்த வழியாக செல்லும்போது மிகவும் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.  -சுரேஷ், அழகுசமுத்திரம், சேலம்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா, ஒட்டப்பட்டி காமராஜ் நகர் பகுதியில் மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் முதியோர்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். அந்த பகுதியில் உள்ள முட்புதர்களில் இருந்து விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. எனவே முட்புதர்களை அகற்றி மின்விளக்கை எரியச் செய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், ஒட்டப்பட்டி, தர்மபுரி.
===
உழவர் சந்தையில் விலை நிர்ணயம்

கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் சற்று அதிகமாக  காணப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் விற்கும் விலையேதான் இங்கும் காணப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உழவர் சந்தையில் சரியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
-சந்துரு, கிருஷ்ணகிரி.

Next Story