பாதாள சாக்கடை கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுவதால் துர்நாற்றம்: தஞ்சையில், பொதுமக்கள் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
தஞ்சையில் பாதாள சாக்கடை கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தஞ்சையில் 1 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:-
தஞ்சையில் பாதாள சாக்கடை கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தஞ்சையில் 1 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பாதாள சாக்கடை
தஞ்சை மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 4 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையமும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆள்நுழை குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு இடங்களில் அடைப்பு காரணமாக ஆள்நுழை குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது.
தஞ்சை கரந்தை அருகே உள்ள சருக்கை சவேரியார் கோவில் தெருவில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள பாதாள சாக்கடை ஆள்நுழை குழியில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் வழிந்தோடிய வண்ணம் உள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
பொதுமக்கள் சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் தஞ்சை- கும்பகோணம் சாலையில் சருக்கை சவேரியார் கோவில் தெருவில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உயரதிகாரிகள் வரவேண்டும் என கோஷமிட்டனர். இந்த மறியல் போராட்டத்தினால் சாலையின் இருபுறங்களிலும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையில் நின்றன.
போலீசார் சமரசம்
பின்னர், தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன், இன்ஸ்பெக்டர் ரவிமதி மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு போராட்டக்காரர்கள், முதலில் எங்கள் தெருவை பார்வையிட வேண்டும், துர்நாற்றம் வீசி, வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு காய்ச்சல் மற்றும் சரும நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கழிவு நீரை அகற்ற வேண்டும், நிரந்தரமான நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கோஷமிட்டனர்.
அப்போது, துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன், தெருவை பார்வையிட்டு, இப்பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றிய பின் செல்கிறேன், நிரந்தரமான நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி மொழி கொடுத்ததின் பேரில், பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
இந்த மறியல் போராட்டத்தில் தஞ்சை- கும்பகோணம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story