வடக்கு பச்சையாறு அணையில் தண்ணீர் திறப்பு- சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்


வடக்கு பச்சையாறு அணையில் தண்ணீர் திறப்பு- சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 23 Dec 2021 7:43 PM GMT (Updated: 23 Dec 2021 7:43 PM GMT)

பிசான சாகுபடிக்காக களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார்.

களக்காடு:
பிசான சாகுபடிக்காக களக்காடு வடக்கு பச்சையாறு அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார்.

வடக்கு பச்சையாறு அணை
தொடர் மழையால் நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள வடக்கு பச்சையாறு அணை முழு கொள்ளளவான 50 அடியை எட்டி நிரம்பி வழிந்தது. இதையடுத்து பிசான சாகுபடிக்காக அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.
சபாநாயகர் மு.அப்பாவு தலைமை தாங்கி, வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, நாங்குநேரியான் கால்வாய், மடத்து கால்வாய், பச்சையாறு கால்வாய்களில் செல்கிறது. இதன் மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் உள்ள 110 குளங்கள் மற்றும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

விவசாயிகளுக்கு பயிர்க்கடன்
பின்னர் சபாநாயகர் அப்பாவு கூறுகையில், ‘விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் சரியாக பங்கீடு செய்து வழங்கப்படும். விவசாயிகளுக்கு வட்டியில்லாத பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. அதன்படி நெல் பயிரிட ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், வாழை பயிரிட ஏக்கருக்கு ரூ.60 ஆயிரமும் கடன் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் வாங்கி பயனடைய வேண்டும்’ என்றார்.

கலந்து கொண்டவர்கள்
பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் மணிகண்டராஜ், உதவி பொறியாளர்கள் பாஸ்கர், ஆனந்த், களக்காடு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வகருணாநிதி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், களக்காடு யூனியன் தலைவர் இந்திரா ஜார்ஜ் கோசல், மாவட்ட துணை செயலாளர் சித்திக், நாங்குநேரி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கிய எட்வின், சுடலைக்கண்ணு,
ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேளாண் கருவிகள்
ராதாபுரம் தனியார் மண்டபத்தில் அகத்தியர் கூட்டு பண்ணை விவசாயம் உழவர் உற்பத்தி நிறுவனத்தின் 2-வது ஆண்டு விழா மற்றும் வேளாண் கருவிகள் கண்காட்சி நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள், இடுபொருட்களை வழங்கினார்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், ராதாபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதாபாய், தோட்டக்கலை துணை இயக்குனர் பாலகிருஷ்ணன், உதவி இயக்குனர் (பொறுப்பு) இசக்கிமுத்து, துணை தோட்டக்கலை அலுவலர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story