மேலும் ஒருவருக்கு கொரோனா


மேலும் ஒருவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Dec 2021 12:40 PM GMT (Updated: 24 Dec 2021 12:40 PM GMT)

ஆரணி அருகே பையூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆரணி

ஆரணி அருகே பையூரில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

ஒமைக்ரான் தொற்று

காங்கோ நாட்டில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் அண்ணாநகர் திரும்பிய சங்கீதா என்பவருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருந்ததால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்‌. 

அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 இதில் சங்கீதாவின் தந்தை ராஜனுக்கும், அவரது தம்பி சதீசுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் நேற்று சங்கீதா மற்றும் அவரது தந்தை ராஜன் ஆகியோருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 முதியவருக்கு கொரோனா 

இதையடுத்து இன்று பையூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் 3-வது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சங்கீதா சொந்த ஊருக்கு வந்தபோது அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை (வயது 75) என்பவர் சங்கீதாவிடம் சுமார் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்.  

அவருக்கு காய்ச்சல், சளி இருந்ததால் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று  கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். 

அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

கடைகளை திறக்க வேண்டாம்

இதுகுறித்து உதவி கலெக்டர் கவிதா கூறுகையில், ஒமைக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிற வீட்டின் அருகில் 5 இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு 200 மீட்டர் இடைவெளிவிட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு கடைகளை திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கிராம நிர்வாக அலுவலர் லோகேஷ், ஊராட்சி செயலர் விஜயகுமார் மற்றும் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தண்டோரா மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

காய்ச்சல் என்று தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வெளியே யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. என்றார்.

கொரோனா தொற்று பாதித்த அண்ணாமலை நகரில் உள்ள பெரும்பாலான கோவில்களுக்கு சென்று வந்துள்ளார், அவரது சொந்த ஊரான கல்லேரிப்பட்டு சென்று வந்து உள்ளதால் அங்குள்ள கிராம மக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும்  சதீசின் மனைவி ஆற்காட்டை சேர்ந்தவர். அவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆற்காட்டில் விட்டு விட்டு வந்துள்ளார். 

அங்கு உள்ளவர்களுக்கும் ஒமைக்ரான் தொற்றுக்கான அறிகுறி இருப்பதாக அவர்கள் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என  எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா தெரிவித்தார். 

Next Story