அழுகிய முட்டைகள் இருந்ததாக புகார்: அரசு பள்ளி தலைமையாசிரியர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்


கரூர்
x
கரூர்

அரசு பள்ளியில் அழுகிய முட்டைகள் இருந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் பிரபுசங்கர் நடவடிக்கை எடுத்தார்.

தோகைமலை, 
தொடக்கப்பள்ளி
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் நாகனூர் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 152 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தினமும் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு உணவுடன் வழங்கப்பட இருந்த முட்டைகள் அழுகிய நிலையில் இருப்பதாக புகார் வந்தது. 
அதன்படி கல்வி மேலாண்மை குழு தலைவி செல்வராணி, பெற்றோர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேற்று முன்தினம் சென்று ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் பள்ளியில் அழுகிய நிலையில் தரமில்லாத முட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 
கலெக்டர் ஆய்வு
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று காலை சம்பந்தப்பட்ட நாகனூர் தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று சத்துணவிற்காக பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்கள், இருப்பு உள்ள முட்டைகளின் தரங்களையும் ஆய்வு செய்தார். 
இந்த ஆய்வின்போது குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், வட்டாட்சியர் விஜயா, பொதுமக்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
பணியிடை நீக்கம்
இந்த ஆய்வு குறித்து கலெக்டர் பிரபுசங்கர் கூறியதாவது:- 
தோகைமலை ஊராட்சி ஒன்றியம், நாகனூர் அரசு ஆரம்பப்பள்ளியில் சத்துணவிற்காக வழங்கப்பட்ட உணவுப்பொருட்கள் தரம் ஆய்வு செய்யப்பட்டது. அனைத்து உணவு பொருட்களின் தரமும் நல்ல நிலையில் உள்ளது. குறிப்பாக முட்டைகளை தண்ணீரில் இட்டு பரிசோதிக்கப்பட்டது. அதில் அனைத்து முட்டைகளும் தரமாக நல்ல நிலையில் உள்ளன. 
கடந்த வாரம் வழங்கப்பட்ட முட்டைகளை உரிய காலத்தில் அழிக்காமல் கெட்டுப்போன முட்டைகளை வைத்திருந்தது கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் தேன்மொழி, சமையலர் லெட்சுமி ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதனை கண்காணிக்க தவறிய பள்ளி தலைமை ஆசிரியர் தனலெட்சுமியும்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார், என்றார்.


Next Story