ஈரோட்டில் சினிமா பாணியில் தொழில் அதிபரை காரில் கடத்தி ரூ.15 லட்சம் பறித்த கும்பல் 4 பேர் கைது


ஈரோட்டில் சினிமா பாணியில் தொழில் அதிபரை காரில் கடத்தி ரூ.15 லட்சம் பறித்த கும்பல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 29 Dec 2021 5:11 PM GMT (Updated: 29 Dec 2021 5:11 PM GMT)

ஈரோட்டில் சினிமா பாணியில் தொழில் அதிபரை 7 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்று ரூ.15 லட்சத்தை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் சினிமா பாணியில் தொழில் அதிபரை 7 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்று ரூ.15 லட்சத்தை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடத்தல்
ஈரோடு கருங்கல்பாளையம் குயிலாந்தோப்பு மரப்பாலம் 3-வது வீதியை சேர்ந்தவர் சிவா என்கிற சிவசுப்பிரமணியம் (வயது 57). இவர் கருங்கல்பாளையத்தில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சிவசுப்பிரமணியம் தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதுபோல் கடந்த 25-ந் தேதி காலையில் அவர் நடைபயிற்சி செய்வதற்காக ஈரோடு வ.உ.சி. மைதானத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அவர் மைதானத்துக்கு நடந்து சென்றபோது, அங்கு ஒரு கும்பல் காரில் வந்தது.
காரில் இருந்து திபுதிபுவென இறங்கிய சிலர் சிவசுப்பிரமணியத்தை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று காரில் ஏற்றி கடத்தி சென்றார்கள். பின்னர் காரில் இருந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டியது. கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் கொன்று ஆற்றில் வீசி விடுவதாக மிரட்டியுள்ளனர்.
ரூ.15 லட்சம்
சிவசுப்பிரமணியத்தை எங்கும் இறக்கிவிடாமல், காரிலேயே அந்த கும்பல் பல இடங்களில் சுற்றிச்சுற்றி வந்தது. எனவே செய்வதறியாது தவித்த சிவசுப்பிரமணியம் தனது நண்பர் கண்ணன் என்பவரை தொடர்பு கொண்டு தான் கடத்தப்பட்ட விவரத்தை தெரிவித்து ரூ.15 லட்சத்தை தயார் செய்து கொண்டு வரும்படி கூறி உள்ளார். மேலும், அந்த கும்பல் கூறியதைப்போல வேறு யாரிடமும் தகவல் கொடுக்காமல் வரும்படி அவர் தனது நண்பரிடம் கூறினார்.
கடத்தல் கும்பல் கூறியதைப்போல, அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி பகுதியில் பணம் எடுத்து வரும்படி கண்ணனிடம் சிவசுப்பிரமணியம் கூறினார். அவர் கூறியதைபோல ரூ.15 லட்சத்தை கண்ணன் எடுத்து சென்று கடத்தல் காரர்களிடம் ஒப்படைத்தார். அதன்பிறகு பெருந்துறை பஸ் நிலையம் பகுதியில் சிவசுப்பிரமணியத்தை விடுவித்த கும்பல் அங்கிருந்து அதே காரில் தப்பி சென்றது.
தனிப்படை
போலீசில் புகார் கொடுத்தால் கொலை செய்துவிடுவதாக கடத்தல் கும்பல் கூறியதால், பயத்தில் சிவசுப்பிரமணியம் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லாமல் இருந்து வந்தார். இந்தநிலையில் கடத்தல் கும்பல் மீண்டும் அவரை தொடர்பு கொண்டு மேலும் பணத்தை கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சிவசுப்பிரமணி நேற்று முன்தினம் புகார் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்பேரில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கடத்தல் கும்பல் பற்றிய விவரங்களை சேகரிக்க தொடங்கினார்கள். காரில் கடத்தி சென்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை வைத்து தேடுதல் வேட்டையை போலீசார் தொடங்கினார்கள்.
4 பேர் கைது
இந்தநிலையில் கடத்தல் கும்பலை சேர்ந்த சிலர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பதுங்கி இருந்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள், ஈரோடு கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (41), கலைஞர் நகரை சேர்ந்த தர்மராஜ் (37), கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா (42), நாமக்கல் மாவட்டம் வெப்படை என்.சி.காலனியை சேர்ந்த ராஜாமணியின் மகன் கவுரிசங்கர் (26) ஆகியோர் என்பதும், இவர்களுடன் மேலும் 3 பேர் சேர்ந்துதான் சிவசுப்பிரமணியத்தை கடத்தி சென்று ரூ.15 லட்சத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்தை மீட்டனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோட்டில் சினிமா பாணியில் தொழில் அதிபரை 7 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்று ரூ.15 லட்சத்தை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story