பொக்லைன் ஆபரேட்டரை தாக்கிய 3 பேர் கைது


பொக்லைன் ஆபரேட்டரை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 Dec 2021 6:58 PM GMT (Updated: 29 Dec 2021 6:58 PM GMT)

அரவக்குறிச்சி அருகே பொக்லைன் ஆபரேட்டரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரவக்குறிச்சி, 
பொக்லைன் ஆபரேட்டர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா வளையமாதேவியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ஜீவா (வயது 19). இவர் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
இதற்காக அதே பகுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கு அவருடன் சேலம் மேச்சேரியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் பிரதீப் (24) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த ரஜினி மகன் நவஜீவா (19) ஆகியோரும் தங்கியுள்ளனர்.
இருதரப்பினர் இடையே மோதல்
சம்பவத்தன்று இரவு நவஜீவாவின் பெரியப்பா மகன் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தவசிமணியின் மனைவியை பற்றி ஜீவா தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதைக்கேட்ட நவஜீவா தனது பெரியப்பா மகன் தவசிமணியிடம் தொலைபேசியில் கூறியுள்ளார். உடனே தவசிமணி தன்னுடன் பள்ளப்பட்டி ஹபீப் நகர் ராஜன் மகன் லெனின் (26) என்பவரை அழைத்துக் கொண்டு ஜீவா தங்கியிருந்த அறைக்கு சென்று இதுபற்றி கேட்டுள்ளனர்.
அப்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஜீவாவுக்கு தலையில் பலத்த காயமடைந்து பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின் மேல்சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 
3 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக ஜீவா கொடுத்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தவசிமணி, நவஜீவா, லெனின் ஆகிய 3 பேரையும் கைது செய்து அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story