ஆங்கில புத்தாண்டு பிறப்பு: கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு


ஆங்கில புத்தாண்டு பிறப்பு: கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 1 Jan 2022 11:18 PM IST (Updated: 1 Jan 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

புதுக்கோட்டை:
ஆங்கில புத்தாண்டு பிறப்பு
ஆங்கில புத்தாண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 2021-ம் ஆண்டு நேற்று முன்தினம் இரவு 11.59 முடிவடைந்தது. நள்ளிரவு 12 மணி ஆனதும் 2022 புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி புதுக்கோட்டையில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் சில இடங்களில் வெடிக்கப்பட்டன. வீடுகளில் பலர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். புதுக்கோட்டையில் தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
புதுக்கோட்டை திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பிரார்த்தனை முடிந்ததும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
பக்தர்கள் வழிபாடு
இதேபோல கோவில்களில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில், பஸ் நிலையம் அருகே உள்ள சங்கீத மங்கல விநாயகர் கோவில், சாந்தநாத சாமி கோவில், வரதராஜ பெருமாள் கோவில், விட்டோ பெருமாள் கோவில், திருக்கோகர்ணம் பிரகதாம்பாள், சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
மேலும் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டு பிறப்பான நேற்று காலையில் புதுக்கோட்டையில் லேசாக தூறல் மழை பெய்ததது. இருப்பினும் பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து வழிபாடு நடத்தினர்.
இதேபோல புதுக்கோட்டையில் ஒரு மண்டபத்தில் சத்சங்கம் அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜோதி தரிசன சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கீரமங்கலம்
கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கீரமங்கலம் மெய்நின்றநாதசுவாமி கோவில், குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில், சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியர் சுவாமி கோவில், செரியலூர் தீர்த்தவிநாயகர் கோவில், முத்துமாரியம்மன் கோவில் உள்பட கொத்தமங்கலம், பனங்குளம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. சுவாமிக்கு சந்தனக்காப்பு உள்ளிட்ட அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தது.
அன்னதானம் 
மேலும் கீரமங்கலத்தில் பிரமாண்ட சிவன் சிலை கொண்ட மெய்நின்றநாத சுவாமி கோவிலில் பழனி பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் இளைஞர்களால்  அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வரும் குழந்தைகளுக்காக சிவன்சிலை அமைந்துள்ள தடாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா திறக்கப்பட்டு குழந்தைகள் விளையாடினார்கள். அதேபோல செரியலூர்-கரம்பக்காடு தீர்த்தவிநாயகர் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. 
விராலிமலை முருகன் கோவிலில் படி பூஜை 
விராலிமலையில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடப்பிறப்பின்போதும் படிகளை தூய்மை செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் கோவில் படிகளை தூய்மை செய்து அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து உதிரி பூக்கள் தூவி மலை அடிவாரத்தில் உள்ள படிகளில் குத்துவிளக்கு ஏற்றி சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். இதையடுத்து மலைமேல் உள்ள முருகன் மற்றும் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
முத்துமாரியம்மன் கோவில் 
பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புத்தாண்டையொட்டி முத்துமாரியம்மனுக்கு தங்க அங்கி சாத்தி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சுவாமிக்கும் வெள்ளி அங்கி சாத்தப்பட்டு தீபாராதனை காண்பித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தேனிமலை முருகன் கோவில், செவலூர் மலையடிப்பட்டி அருகே உள்ள காஞ்சாற்று மலை, வையாபுரி சுப்பிரமணியசுவாமி கோவில், வலையப்பட்டி மலையாண்டி கோவில், பாலமுருகன் கோவில், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் புத்தாண்டை யொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
முனீஸ்வரர்
திருவரங்குளம், பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விபூதி அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் மாதவத்தூர் முருகன் கோவில், திருவரங்குளம் அரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோவில், பிடாரி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
அன்னவாசல் 
அன்னவாசல், இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, பரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்கள், கோவில்களில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நேற்று ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், கூட்டு திருப்பலியும் நடைபெற்றன. புத்தாண்டு நள்ளிரவு சிறப்பு நற்கருணை ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனைகள் செய்து புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இதேபோன்று நார்த்தாமலை, வயலோகம், இருந்திராப்பட்டி, இலுப்பூர், அன்னவாசல், குடுமியான்மலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் காலை முதலே வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 
மணமேல்குடி
மணமேல்குடி உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவிலில் புத்தாண்டையொட்டி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story