கொரோனா விதிமுறைகளை மீறினால் திருமண மண்டபம் உரிமம் ரத்து; கலெக்டர் எச்சரிக்கை
அரசு அறிவித்த கொரோனா விதிமுறைகளை மீறினால் திருமண மண்டபங்கள், தியேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் விஷ்ணு எச்சரித்து உள்ளார்.
நெல்லை:
அரசு அறிவித்த கொரோனா விதிமுறைகளை மீறினால் திருமண மண்டபங்கள், தியேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் விஷ்ணு எச்சரித்து உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், நகைக்கடைகள், தியேட்டர்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது:-
இரவு நேர ஊரடங்கு
கொரோனா, ஒமைக்ரான் பரவல் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த முறை எதிர்பார்த்ததை விட அதிகமாக 24 மணி நேரத்தில் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளது.
வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் அனைத்திலும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை உரிமையாளர்கள் மிகவும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். திருமணங்களுக்கு 100 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும். தியேட்டர்களில் 50 சதவீதம் பார்வையாளர்களும், வணிக நிறுவனங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களும் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
அனைத்து நிறுவனங்களிலும் 100 சதவீதம் ஊழியர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளதை உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கடை வாசலில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். வாடிக்கையாளர்கள், கடை ஊழியர்கள் அனைவரும் முககவசம் அணிந்து இருக்க வேண்டும்.
உரிமம் ரத்து
அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறும் திருமண மண்டபங்கள், தியேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். வணிக நிறுவனங்கள் விதிமுறைகளை மீறினால் எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் கடையை மூடி சீல் வைக்கப்படும்.
மேலும் வருகிற ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படும். பால் வினியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் அனுமதி அளிக்கப்படும்.
எனவே அரசு அறிவித்த விதிமுறைகளை அனைவரும் முழுமையாக கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர், சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் வெங்கட் ரங்கன், துணை இயக்குனர் கிருஷ்ண லீலா, மாநகர நல அலுவலர் ராஜேந்திரன், கிராம பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் அருணாசலம், நெல்லை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் நாகசங்கர் மற்றும் தாசில்தார்கள், வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story