சாலையோர பள்ளத்தில் இறங்கிய பஸ்; 5 பேர் படுகாயம்


சாலையோர பள்ளத்தில் இறங்கிய பஸ்; 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Jan 2022 8:38 PM GMT (Updated: 2022-01-08T02:08:16+05:30)

சாலையோர பள்ளத்தில் பஸ் இறங்கியதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

ஆண்டிமடம்:

பள்ளத்தில் இறங்கிய பஸ்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அணிகுதிச்சான் கிராமத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி நகர பஸ் ஒன்று சென்றது. பஸ்சை டிரைவர் விருத்தாச்சலம் முல்லைநகரை சேர்ந்த தங்கவேல் மகன் பிரகாஷ்(வயது 37) ஓட்டினார்.  சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிமடம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி, கருக்கை கிராமங்களுக்கு இடையே அந்த பஸ் வந்தபோது எதிரே சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி வேகமாக வந்த சரக்கு லாரி, பஸ் மீது மோதிவிடுவது போன்று தாறுமாறாக வந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக சுதாரித்துக்கொண்ட பஸ் டிரைவர் பிரகாஷ், பஸ் மீது லாரி மோதாமல் இருக்க பஸ்சை இடதுபக்கத்தில் லாவகமாக திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதில் பஸ்சில் பயணித்த அகரம் கிராமம் கீழத்தெருவை சேர்ந்த கல்லூரி மாணவியான வேல்முருகனின் மகள் பூமிகா(20), ராங்கியம் கிராமம் காலனி தெருவைச் சேர்ந்த ரமேசின் மகன் தேவன்(18), ராங்கியம் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன்(59), தில்லைகோவிந்தன்(62) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த பஸ் டிரைவர் பிரகாசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
லாரி டிரைவர் கைது
இதற்கிடையே அந்த சரக்கு லாரி பஸ்சின் பின் பக்கம் மோதியது. இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி லாரியை ஓட்டி வந்த டிரைவர் கடலூர் மாவட்டம் முத்தாண்டிகுப்பம் கிழக்குயிருப்பு பகுதியை சேர்ந்த சபரிசெல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக கூறி, அவரை பயணிகள் பாராட்டினர்.

Next Story