பொதட்டூர்பேட்டை அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்த 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பொதட்டூர்பேட்டை அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை அருகே எஸ். கே.வி.ஆர். பேட்டை என்ற கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரினீத் ஆலோசனையின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி தலைமையில் போலீசார் அதிரடியாக அந்தக் கிராமத்திற்குச் சென்றனர்.
அப்போது அங்குள்ள கோவிந்தராஜ் (வயது 65) என்பவரின் கோழிப்பண்ணையில் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்கு வெள்ளை கோணிப்பையில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ரேஷன் அரிசி மொத்தம் 3½ டன் எடை இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து திருவள்ளூர் மாவட்ட உணவு வழங்கல் துறைக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட உணவு வழங்கல் துறை அதிகாரிகள் அங்கு சென்று பதுக்கி வைக்கப்பட்ட ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
மேலும் கோழிப்பண்ணை உரிமையாளர் கோவிந்தராஜை விசாரணைக்காக திருவள்ளூர் அழைத்துச்சென்றனர். கோழிப்பண்ணை உரிமையாளர் கோவிந்தராஜன் மகள் பொதட்டூர்பேட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story