முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்


முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி  போடும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 10 Jan 2022 8:26 PM GMT (Updated: 10 Jan 2022 8:26 PM GMT)

மதுரையில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். முதல் ஊசியை அரசு ஆஸ்பத்திரி டீன் போட்டுக்கொண்டார்.

மதுரை
மதுரையில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். முதல் ஊசியை அரசு ஆஸ்பத்திரி டீன் போட்டுக்கொண்டார்.
பூஸ்டர் தடுப்பூசிகள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
இந்தநிலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்களப் பணியாளர்கள், சுகாதார துறையினருக்கு 3-வது தவணை முன்னெச்சரிக்கை பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா மூன்றாம் தவணை (பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று தொடங்கியது. இதனை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேலுக்கு, முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூடுதல் படுக்கைகள்
இதனை தொடர்ந்து, அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா அதிகமாக பரவி வருகிறது என்பதை அறிந்தவுடன் தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு அதனை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் தொடக்கமாக முன்கள பணியாளர்களுக்கு 3-வது தடுப்பூசி எனப்படும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி இருக்கிறது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தோப்பூர் மருத்துவமனையில் 1500 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல், தாலுகா மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா கண்காணிப்பு மையங்கள் என மொத்தம் 2,220 படுக்கைகள் உள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி தடுப்பூசி செலுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே இந்த நோயில் இருந்து தப்பிக்க முடியும்.
44 ஆயிரம் முன்கள பணியாளர்கள்
மதுரையில் வருகிற ஒரு மாதத்தில் 44 ஆயிரம் முன்கள பணியாளர்களுக்கும், அதன் பின்னர் 60 வயதை கடந்தவர்களுக்கும், படிப்படியாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது கொரோனா பாதிப்பு மதுரையில் குறைவு. 2-வது அலையின் போது எடுக்கப்பட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை விட கூடுதல் முன்எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம்.
கொரோனா அச்சத்தை போக்கும் வகையில் கிராமம், கிராமமாக சென்று அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கண்டு அஞ்ச தேவையில்லை. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
835 பேருக்கு பூஸ்டர்
இதைதொடர்ந்து மருத்துவ கல்லூரி வளாகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்தது. இதில் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். முதல் நாளான நேற்று மதுரையில் 835 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதவிர முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் 8 ஆயிரத்து 985 பேருக்கு நேற்று செலுத்தப்பட்டுள்ளது.

Next Story