பெங்களூருவில் இருந்து மூங்கில்துறைப்பட்டுக்கு மினி லாரியில் 750 கிலோ வெல்லம் கடத்தல் டிரைவர் கைது


பெங்களூருவில் இருந்து மூங்கில்துறைப்பட்டுக்கு மினி லாரியில் 750 கிலோ வெல்லம் கடத்தல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2022 4:59 PM GMT (Updated: 11 Jan 2022 4:59 PM GMT)

சாராயம் காய்ச்சுவதற்காக பெங்களூருவில் இருந்து மூங்கில்துறைப்பட்டுக்கு மினி லாரியில் 750 கிலோ வெல்லத்தை கடத்தி வந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்

மூங்கில்துறைப்பட்டு

வாகன சோதனை

மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுகத்அலி மற்றும் போலீசார் தென்பெண்ணை ஆற்று மேம்பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்த மினி லாரியை நிறுத்தினர். அதில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார். டிரைவர் மட்டும் பிடிபட்டார்.  இதையடுத்து மினி லாரியில் இருந்த காய்கறி மூட்டைகளை சோதனை செய்தபோது காய்கறி மூட்டைகளுக்கு அடியில் உள்ள மூட்டைகளை திறந்து பார்த்தபோது அதில் வெல்லம் மற்றும் 120 லிட்டர் சாராயம் இருந்ததை கண்டுபிடித்தனர். 

டிரைவர் கைது

விசாரணையில் பிடிபட்ட டிரைவர் சேராப்பட்டு கீழ்நிலவூர் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் தமிழ்மணி(வயது 30), தப்பி ஓடியவர் இவரது உறவினர் மேல்நிலவூரை சேர்ந்த பொன்னுசாமி மகன் அண்ணாதுரை(26) என்பதும், சாராயம் காய்ச்சுவதற்காக பெங்களூருவில் இருந்து வெல்லத்தை கடத்தி வந்ததும், சந்தேகம் வராமல் இருப்பதற்காக மேல் பகுதியில் உள்ள மூட்டைகளில் காய்கறி மூட்டைகளை வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தமிழ்மணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மினி லாரியுடன் 750 கிலோ வெல்லம், 120 லிட்டர் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அண்ணாதுரையை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story