பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை
நாகர்கோவில் அருகே பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த 3 பேர் கும்பலை போலீசார் ேதடி வருகின்றனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த 3 பேர் கும்பலை போலீசார் ேதடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
பிரபல ரவுடி
நாகர்கோவில் அருகே உள்ள குஞ்சன்விளை பகுதியை சேர்ந்தவர் சுந்தர மகாலிங்கம். ஓய்வு பெற்ற வன ஊழியர். இவரது மகன் தங்க கிருஷ்ணன் (வயது 39). இவர் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் பகுதியில் சொந்தமாக வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
தங்க கிருஷ்ணன் மீது சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் உள்பட பல வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தங்க கிருஷ்ணன் ரவுடி பட்டியலில் உள்ளார்.
ஓட ஓட வெட்டி கொலை
இந்த நிலையில் தங்ககிருஷ்ணன் நேற்று இரவு 8 மணியளவில் குஞ்சன்விளை குமுளிமூடு இசக்கிஅம்மன் கோவில் அருகே உள்ள ஒரு வீட்டு மனையில் சிலருடன் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் இருந்தவர்கள் தங்க கிருஷ்ணனிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றனர். உடனே, தங்க கிருஷ்ணன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
ஆனாலும் விடாமல் தங்ககிருஷ்ணனை ஓட, ஓட துரத்தி சென்று அரிவாளால் கழுத்து உள்பட பல இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில் தங்க கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, பயிற்சி துணை சூப்பிரண்டு சிந்து, சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
திட்டமிட்டு வெட்டி சாய்த்தனர்
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 3 பேர் அடங்கிய ஒரு கும்பல் தங்க கிருஷ்ணனை திட்டமிட்டு மது குடிக்க அழைத்து வந்து வெட்டி சாய்த்தது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story